Nov 5, 2025 - 01:16 PM -
0
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, மோதர தேவாலயக் குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் மீட்டியாகொடையில் கரந்தெனிய சுத்தாவின் தரப்பால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மகனால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தற்போது தகவல் வெளியாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலங்கொடை நகர சபைக்குச் சொந்தமான பிரதான நூலகத்திற்கு அருகில் நேற்று (04) காலை 10.30 மணியளவில் மோதர தேவாலய குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை இடம்பெற்ற விதம் அருகில் இருந்த சிசிடிவி (CCTV) கெமெராவில் பதிவாகியுள்ளது.
அதில், கொல்லப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவரை சிவப்பு நிற கார் ஒன்று துரத்திச் செல்வது பதிவாகியுள்ளது.
பின்னர் அந்தக் கார், மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கீழே விழுந்ததும், காரில் இருந்து இறங்கிய துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை விரட்டிச் சென்று சுட்டுக் கொல்வது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், கடந்த மே மாதம் 4ஆம் திகதி மீட்டியாகொடை, மானம்பிய, தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொலையை கரந்தெனிய சுத்தாவின் தரப்பு இயக்கியிருந்த நிலையில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் அவரது மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்டியாகொடையில் கொல்லப்பட்டவரின் தந்தையான மஹதும நளின் என்பவரின் மகனான இசுரு என்பவர், கரந்தெனிய சுத்தாவின் மைத்துனனின் வெளிநாட்டில் உள்ள மகனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியமை இதற்கு காரணமாகியுள்ளது.
அப்போது அவர், "உங்கள் அப்பாவை கொன்றது நான் தான். அவர் என் அப்பாவைக் கொன்றதால்" என்று கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இசுரு என்பவர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு தென் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் ஆலோனையின் பேரில், எல்பிட்டிய பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் மேற்பார்வையின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

