Nov 7, 2025 - 06:13 PM -
0
கல்வி இலக்குகளை அடைவதில் அதிபர்களின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் பொறுப்புகூறலை அங்கீகரிக்கும் வகையில், அதிபர் பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிபர் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிக்கவும் கல்வி இலக்குகளை அடைவதை அதிகரிப்பதற்காக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், அத்தகைய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் அரச ஊழியர்களின் முற்பணக் கணக்கு வரையறைக்கென 10,000 மில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கேற்ப, 4.2 சதவீத வட்டி அடிப்படையில் பெற்றுக் கொள்ளக் கூடிய இடர் கடன் முற்பணத் தொகையை, 250,000 இலிருந்து 400,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியங்கள் 2019 ஆம் ஆண்டின் சம்பள கட்டமைப்பின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை 2026 ஜூலை மாதம் முதல் செலுத்துவதற்கு 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தின் இறுதியில் அவற்றைத் திருப்பிப் பெறும் அடிப்படையில் வழங்கப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்ய 12,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் அரச துறையில் சகல ஆட்சேர்ப்புகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் அரசியல் தலையீடின்றி உரிய பரீட்சை மற்றும் சேவைப் பிரமாணங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்வதன் மூலம், இளைஞர், யுவதிகளுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படும்.
அரசாங்கத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு (Digital Blue Print) இணங்கும் வகையில் உள்ளீடுகளுக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

