Nov 7, 2025 - 07:29 PM -
0
அபே ஜனபல கட்சி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தக வீரகோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதை அறிவித்துள்ளார்.
அந்தக் கட்சியின் உச்சபீடம் , தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமது கட்சியின் ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், ஜனாதிபதி நாட்டுக்கு முன்வைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் அந்தக் கட்சி எதிர்பார்ப்பதாக அந்த அறிவித்தல் கூறுகிறது.
தற்போதைய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பெரும்பாலான தேசியப் பணிகளை அபே ஜனபல கட்சி உயர்வாகப் பாராட்டுகிறது.
சிங்கள கலாச்சாரப் பாரம்பரியங்களைப் பாதுகாத்து, பௌத்த சூழலில் எப்போதும் வாழக்கூடிய ஒரு இலங்கை தேசியத்தை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் முயற்சிக்குத் தமது கட்சியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் அந்த அறிவித்தல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

