Nov 7, 2025 - 07:50 PM -
0
2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் இரண்டாம் கட்டத்தை ஜனவரி மாதம் முதல் வழங்கவும், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூ. 1,750/- வரை உயர்த்தவும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
சுங்க வரிக் கொள்கையில் மாற்றம் செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரம் 2019 ஆம் ஆண்டில் இருந்த நிலையை இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் அடையும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
2026 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ. 5,300 பில்லியனாகவும், மொத்தச் செலவு ரூ. 7,057 பில்லியனாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ. 1,757 பில்லியனாக உள்ளது.
2026 வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கமான தேநீர் விருந்துபசாரம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (08) ஆரம்பமாகி நவம்பர் 14 ஆம் திகதி வரை தொடரும்; இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதன்பின், வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 வரை நடைபெறும். மேலும், வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 05 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

