Nov 9, 2025 - 10:51 AM -
0
நேற்று (08) இரவு பெய்த கனமழையின் காரணமாக, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள வனராஜா பகுதியில் இன்று (09) காலை 08 மணியளவில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
முறிந்து வீழ்ந்த மரம் வீதியின் குறுக்கே விழுந்தமையினால், ஹட்டன் - மஸ்கெலியா மற்றும் ஹட்டன் - பொகவந்தலாவ வீதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. இதனால் குறித்த வீதியினூடாக பயணித்த பயணிகள் மற்றும் சாரதிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டது.
மேலும், முறிந்து வீழ்ந்த மரம் மின்சார கம்பத்தின் மீது விழுந்ததில் இரண்டு மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக அப்பகுதிக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச மக்கள் முன்வந்து மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மக்கள் ஒன்றிணைந்து மரத்தை அகற்றியதன் பின்னர், குறித்த பிரதான வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.
சேதமடைந்த மின்சார கம்பங்களை சீர் செய்யும் நடவடிக்கையினை மின்சார சபையினர் மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
--

