Nov 12, 2025 - 11:46 AM -
0
பிரபல பொலிவுட் நடிகர் கோவிந்தா, நேற்று (11) இரவு தனது வீட்டில் திடீரென மயக்கமடைந்து, சுயநினைவை இழந்த நிலையில், மும்பையில் உள்ள கிரிடிகேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
61 வயதான நடிகர் கோவிந்தா, செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 8:30 மணியளவில் (இந்திய நேரப்படி) திடீரெனச் சோர்வடைந்து, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தார் என்று அவரது சட்ட ஆலோசகரும் நண்பருமான லலித் பிந்தால் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர் ஜூஹூ புறநகரில் உள்ள கிரிடிகேர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கோவிந்தா தற்போது ஓய்வெடுத்தும் வருகிறார் என்று பிந்தால் உறுதிப்படுத்தியுள்ளார்.
மயக்கம் மற்றும் குழப்பமான நிலைக்கான காரணத்தைக் கண்டறிய அவருக்கு தற்போது பல மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நரம்பியல் நிபுணரின் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மயக்கமடைவதற்கு முன், கோவிந்தா அதிகாலையில் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சிக்காகப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்ததாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.
கோவிந்தா விரைவில் குணமடைய ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் சமூக ஊடகங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

