Nov 13, 2025 - 07:59 AM -
0
டெல்லி செங்கோட்டை எதிரே கடந்த 10-ஆம் திகதி இரவு, வெடிபொருளை மறைத்து எடுத்துச் சென்ற கார் வெடித்துச் சிதறியது.
இதில் 13 பேர் பலியானார்கள். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் 3 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் பல ஆயுதங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முதலில் டெல்லி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பயங்கரவாதத்தோடு தொடர்புடைய சம்பவம் என்பதால் பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சேவைக்கு மாற்றப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ஜெய்ஷ்-இ-மொஹமட் அமைப்பு சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.
இந்த சுவரொட்டிகள் மீது ஜம்மு காஷ்மீர் மாநில பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் பயங்கரவாதிகளின் குற்றப்பயணத்தை பின்தொடர வழிவகுத்தது.
பொலிஸார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடைய வைத்தியக்குழு நாட்டில் பல இடங்களில் குறிப்பாக டெல்லியில் நாசவேலையை நடத்த திட்டமிட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இர்பான் அகமது என்பவரையும், ஒரு டாக்டரையும் ஜம்மு காஷ்மீர் பொலிஸார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் உத்தரபிரதேச மாநிலம் ஷாகரன்பூரில் வைத்தியர் அதீல் ராதர் கைது செய்யப்பட்டார்.
இவர் பொலிஸில் அளித்த வாக்குமூலத்துக்கு பிறகுதான் அரியானா மாநிலத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழக வைத்தியர்கள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸார் தங்களது விசாரணையை அரியானாவில் தொடர்ந்தபோது பரிதாபாத்தில் வைத்தியர் முசமில் ஷகீலும், பெண் வைத்தியர் ஷாகீத்தும் பிடிபட்டனர்.
முசமில் ஷகீலின் அடுக்குமாடி அறையில் இருந்து 360 கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டது.
இந்தநிலையில்தான் 10-ம் திகதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. பயங்கரவாத வைத்தியர் குழுவில் இணைந்திருந்த உமர் மொஹமட், தாம் கொள்வனவு செய்த காரில் வெடிபொருட்களை எடுத்துச் சென்று செங்கோட்டை அருகே வெடிக்கச் செய்துள்ளார்.
இந்த கார் அன்றைய தினம் டெல்லியில் சுற்றிய காட்சிகள் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் எடுக்கப்பட்டு, அதில் உமர் மொஹமட் இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் 2 கார்களை உமர் மொஹமட் வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் அதனை தேடினர். இதில் சிவப்பு நிற காரும் ஒன்று. அந்த காரின் பதிவு எண்ணை டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநில பொலிஸாருக்கு அனுப்பி தேடச் செய்தனர்.
இந்தநிலையில் அந்த காரை பொலிஸார் நேற்று மாலை கண்டுபிடித்து விட்டனர். அரியானா மாநிலம் கண்டவாலி கிராமத்துக்கு அருகே அந்த கார் நிறுத்தப்பட்டு இருந்தது.
அந்த காரை பரிதாபாத் பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இதுதவிர மேலும் ஒரு காரையும் பொலிஸார் தேடி வருகிறார்கள்.
கார் வெடிப்பு சம்பவத்தில் உமர் மொஹமட் தற்கொலை குண்டாக வெடித்திருப்பார் என கருதப்படுவதால் கார் மற்றும் வெடிப்பு பகுதியில் கிடந்த சதைப்பகுதிகளை எடுத்து, அதை உமர் மொஹமட்டின் தாயார் டி.என்.ஏ.வுடன் ஒப்பிட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன.
சந்தேநபரின் தாயாரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டது.
அங்கு ஒப்பீட்டு பரிசோதனை நடைபெற்ற நிலையில் இரண்டு டி.என்.ஏ. மாதிரிகளும் பொருந்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் இது ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதல் என கருதப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சம்பவத்திற்கு முன்பாக செங்கோட்டை அருகே ராம்லீலா மெய்டன் ஆசாம் அலிசாலையில் உள்ள ஒரு மசூதியில் டாக்டர் உமர் தங்கியிருந்ததாக தெரிகிறது. அதன்பிறகே அவர் செங்கோட்டை அருகே காரில் சென்றுள்ளார்.
3 கார்கள் வாங்கப்பட்டதை கவனிக்கும்போது அவற்றை டெல்லியில் ஆங்காங்கே நிறுத்தி வெடிக்க வைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதற்காக அவர்கள் ஒத்திகை பார்த்திருப்பதாகவும் தெரிகிறது. வெடித்து சிதறிய கார் கடந்த தீபாவளிக்கு முன்பு செங்கோட்டை பகுதியில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.
வைத்தியர் முசமில் ஷகீனின் செல்போனில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின்படி கடந்த ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அவர் பல முறை டெல்லி செங்கோட்டை பகுதிக்கு வந்துசென்றுள்ளார்.
எனவே அவர் குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்புக்கு திட்டமிட்டு இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாகத்தான் செங்கோட்டையை சுற்றி பார்த்ததும் தெரியவந்தது. ஆனால் தீவிர ரோந்துப்பணியால் அந்த சதிச்செயல் முறியடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் தீபாவளி பண்டிகைக்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த சமயத்திலும் சதித்திட்டத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் அதை செயல்படுத்த முடியவில்லை. டிசம்பர் 6-ஆம் திகதி (பாபர் மசூதி இடிப்பு தினம்) கார் வெடிப்பை நிகழ்த்தலாம் என திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது.
ஆனால் அடுத்தடுத்து வெடிபொருளை கைப்பற்றி அவர்களின் சதித்திட்டத்தை பொலிஸார் முறியடித்து வந்த ஆத்திரத்தில் 10 ஆம் திகதி உமர் மொஹமட் காரை வெடிக்க செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அவர் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடம் மற்றும் தகுந்த நேரத்தை எதிர்பார்த்து செங்கோட்டை பகுதியில் சுற்றி வந்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.

