Nov 13, 2025 - 02:10 PM -
0
இலங்கையில் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் (“SCB Sri Lanka”) செல்வ முகாமைத்துவம் மற்றும் தனிநபர் வங்கிச்சேவை வணிகத்தை கையகப்படுத்தும் வகையில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியுடன் கட்டுப்படுத்தும் வணிக விற்பனை உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளமை குறித்து DFCC வங்கி பிஎல்சி (“DFCC Bank”) மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
முன்னுரிமை வங்கிச்சேவை (Priority Banking), கடனட்டைகள், தனிநபர் கடன், வைப்புக்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை உள்ளிட்ட SCB Sri Lanka ன் செல்வ மற்றும் தனிநபர் வங்கிச்சேவை வணிகத்தை முன்மொழியப்பட்டுள்ள இந்த கையப்படுத்தல் நடவடிக்கை உள்ளடக்கியுள்ளது. SCB Sri Lanka ன் செல்வ மற்றும் தனிநபர் வங்கிச்சேவைப் பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் தற்போதைய பணிப்பொறுப்புக்களுக்கு நிகரான பொறுப்புக்களுடன், DFCC வங்கியுடன் இணைந்து தமது தொழில்வாழ்வில் தொடர்ந்தும் வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்புக்களையும் இந்த நடவடிக்கை உறுதி செய்யும். இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை இடம்பெறும் சமயத்தில் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள், சேவை மற்றும் உறவுமுறைகளின் தொடர்ச்சி ஆகியன தங்குதடையின்றி மாற்றம் செய்யப்படுவதை DFCC வங்கி மற்றும் SCB Sri Lanka ஆகியன உறுதி செய்யும்.
தனது தனிநபர் மற்றும் செல்வ முகாமைத்துவத் துறையை வலுப்படுத்தி, தனது வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தி, மற்றும் முக்கிய வளர்ச்சிக்கான துறைகளில் விரிவாக்கத்தைக் கட்டியெழுப்பும் DFCC வங்கியின் நீண்ட கால மூலோபாயத்தின் ஒரு அங்கமாக இந்த கையகப்படுத்தல் முன்மொழிவு காணப்படுகின்றது. விரிவாக்கும் முயற்சியில், DFCC வங்கியின் வலுவான நிதி அத்திவாரம் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வண்ணம், இந்த பரிவர்த்தனைக்கான ஒட்டுமொத்த நிதியும், உள்வாரியாக தோற்றுவிக்கப்பட்ட மூலதனத்தினூடாக செலுத்தப்படும்.
DFCC வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் தனிநபர் வங்கிச்சேவை மற்றும் செல்வ முகாமைத்துவ செயல்பாடுகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் சக பணியாளர்களை DFCC வங்கிக் குடும்பத்திற்குள் வரவேற்பதற்கு நாம் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றோம். வங்கிச்சேவையில் 70 ஆண்டுகள் நாம் எட்டியுள்ள இந்த விசேட தருணத்தில், இந்த மூலோபாய மைல்கல்லானது இலங்கையின் வளர்ச்சிவாய்ப்புக்கள் மீது எமது உறுதிமொழியை மேலும் ஆழமாக்கி, பொருளாதாரத்திற்கு, மிக முக்கியமான இலங்கை மக்கள் அனைவருக்கும் ஆதரவளிக்கும் எமது நீண்ட கால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையை வெறுமனே விரிவுபடுத்தல் என்று மட்டுப்படுத்தி விட முடியாது. இது எமது நோக்கத்தின் நீட்டிப்பாகும். அதாவது, அர்த்தமுள்ள வளர்ச்சிக்கு இடமளித்து, உண்மையான மதிப்பை வழங்கி, எமது தேசத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தனிநபர்கள், வணிகங்கள் முதல் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகள் வரை நாம் சேவைகளை வழங்கும், எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரதும் நம்பிக்கை நாம் தொடர்ந்தும் கட்டிக்காப்போம் என்பதை இதன் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளோம்.”
SCB Sri Lanka ன் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமல் தேவரதந்திரி அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “மிகவும் தனித்துவமான வாடிக்கையாளர் திட்டங்களின் எமது வளங்களின் செறிவை பயன்படுத்தும் வகையில் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் உலகளாவிய மூலோபாயத்திற்கு அமைவாகவே எமது செல்வம் மற்றும் தனிநபர் வங்கிச்சேவை வணிகம் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த மாற்றம் தங்குதடையின்றி முன்னெடுக்கப்படுவதையும், பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதையும், மற்றும் எமது ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுவதையும் உறுதி செய்யும் முகமாக, எதிர்வரும் மாதங்களில் DFCC வங்கி அணியுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுவதை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி இலங்கையுடன் மிக நீண்ட கால வரலாற்றையும், பிணைப்பையும் கொண்டுள்ளதுடன், நாட்டில் எமது நிறுவன மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை வணிகத்தை தொடர்ந்தும் வளர்ப்பதில் நாம் தொடர்ந்தும் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது நிறுவன மற்றும் முதலீட்டு வங்கிச்சேவை வாடிக்கையாளர்கள் தாம் ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியிடமிருந்து எதிர்பார்க்கின்ற உயர் தரம்மிக்க சேவை, நம்பிக்கைமிக்க கூட்டாண்மை, மற்றும் புத்தாக்கம்மிக்க தீர்வுகளை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வர்.”
இந்த மைல்கல்லினையடுத்து, இலங்கையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரிணமித்து வருகின்ற தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏழு தசாப்தங்கள் நீண்ட அபிவிருத்தி மற்றும் புத்தாக்கத்தின் பாரம்பரியத்தை அத்திவாரமாகக் கொண்டு DFCC வங்கி அதனை தொடர்ந்தும் கட்டியெழுப்பும். நாட்டின் முதலாவது அபிவிருத்தி நிதி நிறுவனம் என்ற அதன் தோற்றத்திலிருந்து, இன்று முழுமையான வர்த்தக வங்கியான வளர்ச்சி கண்டுள்ள DFCC வங்கி, தேசத்தில் பொருளாதாரத்தை வளர்ப்பதில் தொடர்ச்சியாக முக்கிய பங்காற்றி வந்துள்ளது. நிலைபேணத்தக்க மதிப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுதல் ஆகிய அதன் நோக்கங்களால் வழிநடாத்தப்பட்டு, மிகவும் இலகுவாக வங்கிச்சேவைகளை முன்னெடுக்க இடமளிக்கின்ற, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கியாக மாறும் அதன் பயணத்தை வங்கி தொடர்ந்தும் மிகச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் அதேசமயம், அபிமானம் பெற்ற தொழில்தருநராகவும், நாட்டின் வளர்ச்சி மீது நம்பிக்கைக்குரிய கூட்டாளராகவும் தனது வகிபாகத்தையும், ஸ்தானத்தையும் சிறப்பாகப் பேணி வருகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் உரிய அனுமதிக்கு அமைவாகவே இந்த விற்பனை நடவடிக்கை முற்றுப்பெறும். இது 2026 ன் முற்பகுதியில் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
DFCC வங்கி குறித்த விபரங்கள்
1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது.
நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.
ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி குறித்த விபரங்கள்
உலகில் மிகவும் வலுவான 54 சந்தைகளில் முன்னிலையுடன், நாங்கள் ஒரு முன்னணி சர்வதேச வங்கிக் குழுவாகும். எங்களின் தனித்துவமான பன்முகத்தன்மை மூலம் வணிகத்தையும் செழிப்பையும் ஊக்குவிப்பதே எங்களின் நோக்கமாகும். எங்களின் மரபும் மதிப்புகளும், இங்கே நன்மைக்காக (here for good) எனும் எங்களின் வர்த்தகநாம வாக்குறுதியில் வெளிப்படுகின்றன. ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் பிஎல்சி, லண்டன் மற்றும் ஹொங்கொங் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் மற்றும் நிபுணத்துவக் கருத்துகளுக்கு, sc.com இல் உள்ள Insights பகுதியைப் பார்வையிடவும். ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கியை X, LinkedIn, Instagram மற்றும் Facebook ஆகிய தளங்களில் பின்தொடருங்கள்.

