Nov 15, 2025 - 08:58 AM -
0
ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் படை லெபனானில் கடந்த மாதம் நடத்திய ஆய்வில், இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ எல்லையாக கருதப்படும் நீலக் கோட்டை கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.
நீலக் கோடு என்பது லெபனானை இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் இருந்து பிரிக்கும் ஐ.நா.வால் வரையறுக்கப்பட்ட கோடாகும்.
ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stephane Dujarric) கூறுகையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் எழுப்பப்பட்ட கொன்கிரீட் 'T-சுவர்' சுமார் 4,000 சதுர மீட்டரால் லெபனான் நிலப்பரப்பை உள்ளூர் மக்கள் அணுக முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யருன் பகுதிக்கு தென்கிழக்கே, நீலக் கோட்டைக் கடந்து செல்லும் மேலதிக சுவர் ஒன்றின் ஒரு பகுதியும் எழுப்பப்பட்டு வருவதாக ஐ.நா அமைதிகாக்கும் படையினரை மேற்கோள் காட்டி அவர் கூறினார்.
இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்து இஸ்ரேலிய இராணுவத்திற்கு UNIFIL தகவல் அளித்து, அந்தச் சுவரை அகற்றக் கோரியதாகவும் டுஜாரிக் தெரிவித்தார்.
"லெபனான் பிரதேசத்தில் இஸ்ரேலின் இருப்பு மற்றும் கட்டுமானம் ஆகியவை ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் 1701 மற்றும் லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றின் மீறல்கள் ஆகும்" என்று UNIFIL அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்தச் சுவர் நீலக் கோட்டைக் கடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
"இந்தச் சுவர் 2022-இல் தொடங்கப்பட்ட பரந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
போர் தொடங்கியதிலிருந்தும், அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் ஒரு பகுதியாகவும், வடக்கு எல்லையில் உள்ள பௌதீகத் தடையை வலுப்படுத்துவது உட்பட பல நடவடிக்கைகளை IDF மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

