Nov 15, 2025 - 01:05 PM -
0
வரவு செலவுத்திட்டத்தின் 2 ஆவது வாசிப்பிற்கான வாக்கெடுப்பு நேற்று (14) இடம்பெற்றது. குறித்த வாக்கெடுப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தமிழீழ விடுதலை இயக்கத்தில் விசேட கூட்டத்தின் அடிப்படையில் தான் எதிர்த்து வாக்களித்துள்ளதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் ஜனநாயக மீறல்களை செய்து வருகிறது. அவர்களின் அங்கத்தவர்களை வைத்து கிராமம் தோறும் அபிவிருத்தி குழுவை உருவாக்கி செயல்பட முயல்கின்றது. அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு பிரதேச சபைகள், இனி வரவுள்ள மாகாணசபை, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்படவில்லை. மேலும் இராணுவத்திற்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதை குறித்த வாசிப்பின் போது எதிர்த்துள்ளோம்.
கடந்த வருடம் நிதியை வடக்கிலே கூடுதலாக செலவழிப்பதாக கூறிய போதும் ஒரு வேலைத்திட்டமும் இடம்பெறவில்லை. தற்போது கிழக்கிலும் தமது அபிவிருத்தி பணியை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது இந்த அரசாங்கம்.
எங்களை பொறுத்தவரையில் எமது மக்களின் இனப்பிரச்சினை தீர்வில் இந்த அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.
ஐ.நா.தீர்மானத்தின் படி உள்ளக விசாரணைகளை முன்னெடுப்பதாக கூறி உள்ளார்கள். அதில் எமது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என கூறினாலும், இந்த அரசாங்கம் கால நீடிப்பை மேற்கொள்ளவே முயற்சித்துள்ளது என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த அரசாங்கம் மக்களுக்கு அபிவிருத்தியை மேற்கொள்வதாக வெறும் வாய்ப்பேச்சுடன் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.
--

