செய்திகள்
கடல் அலையில் அள்ளுண்டு இருவர் பலி - ஒருவர் மாயம்

Nov 17, 2025 - 08:10 AM -

0

கடல் அலையில் அள்ளுண்டு இருவர் பலி - ஒருவர் மாயம்

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியதில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த உயிரிழப்புகள் நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

நேற்று மாலை சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் கடற்கரையில் இருந்த பெண் ஒருவரும் 8 வயது சிறுவனும் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். 

இதன்போது பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அந்தப் பெண் உயிரிழந்தார். 

இவ்வாறு உயிரிழந்தவர் தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான பெண் என தெரிவிக்கப்படுகிறது. 

அதேபோல், நேற்று மாலை கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவில் காலி முகத்திடல் கடற்கரையில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கியுள்ளனர். 

இந்நிலையில் கோட்டை பொலிஸார் கடற்படையினருக்கு அறிவித்து நீரில் மூழ்கிய இருவரையும் மீட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 

இவ்வாறு உயிரிழந்தவர் அக்கரபத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது. 

அத்துடன், நேற்று மாலை எகடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகடஉயன கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக எகடஉயன பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு காணாமல் போனவர் கட்டுக்குறுந்த, மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது. 

காணாமல் போன நபர் மேலும் இரு நண்பர்களுடன் குறித்த இடத்தில் நீராடச் சென்றபோது, மூவரும் கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். 

பின்னர், பிரதேசவாசிகளால் அவர்களில் இருவர் மீட்கப்பட்ட போதும், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். 

காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கைகளை எகடஉயன பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05