Nov 17, 2025 - 11:20 AM -
0
JXG (ஜனசக்தி குழுமம்) இன் முன்னணி அங்கத்துவ நிறுவனமான ஜனசக்தி லைஃப், இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் ஆயுள் காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றாக 2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டை அதன் செயல்திறன் மற்றும் உறுதியான வளர்ச்சி வேகத்துடன் நிறைவு செய்தது. இரண்டாவது காலாண்டில் நிறுவப்பட்ட வலுவான முன்னேற்றத்தை தொடர்ந்து நிறுவனம், முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளில் தொழில்துறை அளவுகோல்களை விஞ்சி அபாரமான இலாபம் மற்றும் வணிக விரிவாக்கத்தில் அதன் முன்னேற்றகரமான பாதையைத் தொடர்கிறது.
நிறுவனம் வழமையான புதிய வணிகத்தில் ஆண்டுக்கு ஆண்டு 72% அதிகரிப்பை பதிவு செய்து ரூ.1.227 பில்லியனை எட்டியுள்ளது. வாடிக்கையாளர் கையகப்படுத்தல், வாடிக்கையாளர் தக்கவைப்பு, சேவை பன்முகப்படுத்தல் மற்றும் விரிவடையும் விநியோக வலையமைப்பு ஆகியவற்றின் மீதான மேம்பட்ட கவனம் இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஜனசக்தி லைஃப்பின் நிகர லாபம் 249% அதிகரித்து, 2025 செப்டெம்பர் மாத இறுதியில் ரூ. 2.793 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 800 மில்லியனாக இருந்தது. மொத்த சொத்துக்கள் ரூ. 41.508 பில்லியனாக உயர்ந்தமை நிறுவனத்தின் வலுவான நிதி அடித்தளத்தையும் விவேகமான மூலதன முகாமைத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இக் காலகட்டத்தில் நிறுவனம் மொத்தம் ரூ. 2.603 பில்லியன் இழப்பீட்டுத் தொகையைப் பதிவு செய்துள்ளது. இது அதன் காப்புறுதிதாரர்களுக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதுடன் ஜனசக்தி லைஃப்பின் விரிவடையும் வாடிக்கையாளர் தளத்தையும் ஆயுள் காப்புறுதித் துறையில் அதன் வளர்ந்து வரும் சந்தைப் பங்கையும் வலுப்படுத்துகிறது. நிறுவனம் தனது மதிப்புமிக்க காப்புறுதிதாரர்களுக்கு விரைவான மற்றும் துல்லியமான சேவைகளை வழங்குவதற்காக அதன் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.
நிறுவனத்தின் செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் தலைவர் அன்னிகா சேனநாயக்க, எங்கள் வலுவான Q3 செயல்திறன் எமது தீர்மானங்களை வழிநடத்தும் மூலோபாய கவனம் மற்றும் நிர்வாக கட்டமைப்பை பிரதிபலிக்கிறது. லங்கா ரேட்டிங் ஏஜென்சியால் உறுதிப்படுத்தப்படும் எமது A- கடன் தரப்படுத்தல், நாம் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கை, எமது வணிக மாதிரியின் ஸ்திரத்தன்மை மற்றும் எமது நீண்டகால தொலைநோக்குப் பார்வையை நெறிமுறையாக நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றிற்கு சான்றாகும். நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கும் வலுவான நிர்வாகத் தரங்களை பேணுவதற்கும் எமது காப்புறுதிதாரர்கள், பங்குதாரர்கள் மற்றும் பங்காளர்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம்.” என்றார்.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரவி லியனகே மேலும் கூறியதாவது, இந்த முடிவுகள் நமது மக்களின் வலிமையையும் நமது செயல்பாடுகளின் செயல்திறனையும் பிரதிபலிக்கின்றன. விவேகமான நிதி முகாமைத்துவம் மற்றும் புத்தாக்கம் மீது தெளிவான கவனம் ஆகியவற்றின் ஊடாக எங்கள் காப்புறுதிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு வருமானத்தை அதிகரித்துள்ளோம். எமது குழுக்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் மூலமும் பாதுகாப்பையும் மதிப்பையும் இணைக்கும் அர்த்தமுள்ள ஆயுள் காப்புறுதித் தீர்வுகளை வழங்குவதன் மூலமும் தொடர்ந்து சிறந்த முடிவுகளை வழங்குகின்றன. இந்த நெறிமுறையான முன்னேற்றகரமான போக்கு எமது முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாக அமைவதோடு தொழில்துறையில் நம்பகமான தலைவராக ஜனசக்தி லைஃப்பின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
ஜனசக்தி லைஃப், 2025ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் அதன் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில் வலுவான முன்னேற்றத்துடனும் தெளிவான தொலைநோக்குப் பார்வையுடனும் நுழைகிறது. வலுவூட்டப்பட்ட நிதி நிலை மற்றும் நன்கு பன்முகப்படுத்தப்பட்ட சேவைகளுடன் நிறுவனம் அதன் பங்குதாரர்கள், காப்புறுதிதாரர்கள் மற்றும் பரந்த சந்தைக்கு தொடர்ச்சியான மதிப்பை வழங்குவதில் ஸ்திரமான நிலையில் உள்ளது.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி பற்றி
1994 ஆம் ஆண்டு ஆயுள் காப்புறுதி நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி (ஜனசக்தி லைஃப்), துறையில் புத்தாக்கமான செயற்பாட்டாளராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளதுடன், 30 வருடங்களுக்கு மேலாக அனைவர் மத்தியில் அறியப்படும் நாமமாகவும் திகழ்கின்றது. ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி நிறுவனமானது, இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் உரிமம் பெற்றுள்ளதுடன் லங்கா ரேட்டிங் ஏஜென்சியால் A- கடன் தரப்படுதலை பெற்றிருப்பதன் ஊடாக அதன் நிர்வாகம், நம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இது நாடு முழுவதிலும் உறுதியான பிரசன்னத்தை கொண்டுள்ளதுடன் பரந்த 75 கிளைகள் மற்றும் பிரத்தியேகமான அழைப்பு நிலையத்தையும் கொண்டுள்ளது. “வாழ்க்கையை மேம்படுத்தல் மற்றும் கனவுகளுக்கு வலுவூட்டல்” எனும் நோக்கத்துக்கமைய, ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாக திகழ்வதற்காக ஜனசக்தி லைஃப் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், அதற்காக தனது வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு காப்புறுதிக்கு அப்பாலான சேவையை வழங்குகின்றது. காப்புறுதி, நிதி மற்றும் முதலீட்டு துறைகளில் இயங்கும் நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான ஜனசக்தி குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக “ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி” திகழ்கின்றது.
ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களில் அன்னிகா சேனநாயக்க, பிரகாஷ் ஷாஃப்டர், ரவி லியனகே, ரமேஷ் ஷாஃப்டர், வரினி டி கொஸ்தா, கலாநிதி. நிஷான் டி மெல், சிவகிருஷ்ணராஜா ரெங்கநாதன், கலாநிதி. கிஹான் குணதிலக மற்றும் திலிப் டி எஸ். விஜேரட்ன ஆகியோர் அடங்கியுள்ளனர்.

