செய்திகள்
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

Nov 17, 2025 - 01:54 PM -

0

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

(செய்தி பின்னிணைப்பு - 2.22) 


Nov 17, 2025 - 02:30 PM


பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சற்று முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

 

பங்களாதேஷில் 1971ஆம் ஆண்டில் நடந்த விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அரசு கடந்தாண்டு முடிவு செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தால், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதே சமயம் பங்களாதேஷில் ஏற்பட்ட வன்முறையில் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் , பங்களாதேஷ் நாட்டின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனாவுற்கு பங்களாதேஷ் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஹசீனாவை ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே அவரை பங்களாதேஷிற்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத் தொடர்ந்து இந்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். 

கடந்தாண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை மனித குலத்திற்கு எதிரானது என இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருந்த நிலையில் 'நான் மீண்டும் வருவேன்' என்ற ஓடியோவை ஷேக் ஹசீனா வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு 'போராடியவர்கள் மீது கொடூர ஆயுத தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது மனித குலத்திற்கு எதிரான வன்முறை. திட்டமிட்டு வன்முறைக்கு மூளையாக ஷேக் ஹசீனா செயல்பட்டுள்ளார்' எனக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்கு மரண தண்டனை அறிவித்துள்ளார்.

 ……………………………………………………………..


Nov 17, 2025 - 01:54 PM

 

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை குற்றவாளி என பங்களாதேஷின் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


எவ்வாறாயினும், இந்த குற்றத்திற்கான தண்டணைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்கில், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை இன்று (17) வெளியிடுவதாக அறிவித்திருந்தது.

 

அதன்படி, அவர் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனா தனது ஆட்சிக்காலத்தில் (குறிப்பாக 2024 ஆம் ஆண்டு ஜூலை-ஓகஸ்ட் மாதங்களில்) நடந்த மாணவர் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்காக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

போராட்டக்காரர்கள் மீதான படுகொலை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீதான கொடூரமான தாக்குதல்களுக்கு அவரே நேரடியாக உத்தரவிட்டார் அல்லது தடுக்கத் தவறியதே அடிப்படைக் குற்றச்சாட்டுகளாகும். 

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைகளின்படி, இந்தப் போராட்டங்களை ஒடுக்கும்போது சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த வழக்கில் தலைமை சட்டத்தரணி, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஆவேசமாக வாதிட்டுள்ளார். 

மாணவர் போராட்டங்களை அடுத்து, ஷேக் ஹசீனா கடந்த 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். 

நீதிமன்றம் விடுத்த உத்தரவுகளையும் மீறி அவர் நாடு திரும்பாததால், அவர் இல்லாத நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஜூலை 2025-ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. அவர் கைது செய்யப்படும் அல்லது சரணடையும் நாளில் இருந்து இந்தத் தண்டனை அமலுக்கு வரும் எனவும் நீதிமன்றம் கூறியது. 

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இந்த வழக்கு, பங்களாதேஷ் அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. அவர் குற்றம் சாட்டப்பட்டால், ஒரு நாட்டின் உயரிய அரசியல் தலைவர் மீது இத்தகைய கடுமையான தண்டனை விதிக்கப்படுவது அரிதான நிகழ்வாக இருக்கும். தற்போதைய இடைக்கால அரசாங்கம், ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு சர்வதேச அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05