Nov 17, 2025 - 02:12 PM -
0
தேசிய ரீதியான புத்தாக்கம், இணைப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டல் என்பவற்றைக் கொண்டாடும் நோக்கில் ‘ஒன்றிணைந்து நாம் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் உலகளாவிய தொழில்முனைவு வாரம் (GEW) 2025 நிகழ்வை இலங்கை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
உலகளாவிய தொழில்முனைவு வாரம் (GEW) என்பது உலகம் முழுவதிலுமுள்ள புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் படைப்பாற்றலை ஊக்குவித்தல், ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டாடும் நோக்கிலான வருடாந்த இயக்கமாகும். உலகளாவிய வலையமைப்பின் பங்காளர் என்ற ரீதியில் இலங்கை இவ்வருடமும் இதில் ஈடுபட்டிருப்பதுடன், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மீண்டும் தேசிய ஏற்பாட்டாளராகச் செயற்படுகிறது.
‘ஒன்றிணைந்து நாம் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளிலான இந்த முயற்சியானது இலங்கையில் தொழில்முனைவுக்கான சூழல், சமூகங்களை வலுவூட்டுதல் மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக நிலைபேறான வளர்ச்சி என்பவற்றை முன்னெடுத்துச் செல்ல உதவுகின்றது. GEW 2025 நிகழ்வு நாடு முழுவதிலும் விஸ்தரிக்கப்பட்டிருப்பதுடன், இதன் மூலம் உலக அரங்கில் தனது குரலை வலுப்படுத்தவும், படைப்பாற்றல், மீளும் தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை ஆதரிக்கவும் இலங்கை தயாராகவுள்ளது.
இந்த நிகழ்வு கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025 நவம்பர் 14ஆம் திகதி அலரிமாளிகையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தேசிய அபிவிருத்தியில் ஒரு வினையூக்கியாக தொழில்முனைவோரை மேம்படுத்துவதில் இலங்கை கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது. நாடு முழுவதும் தொழில்முனைவோரின் உணர்வுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற பிரதான நிகழ்வுக்கு சமாந்தரமாக நாடு முழுவதிலும் ஒன்பது மாகாணங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன. பிரதான நிகழ்வில் பிரதமரின் உரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்து மாகாணங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதுடன், நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களும் பங்களிப்பதை உறுதிப்படுத்துவது இந்த நிகழ்வின் நோக்கமாகும். டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் கௌரவ (பொறியியலாளர்) எரங்க வீரரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “உலகளாவிய தொழில்முனைவு வாரம் இலங்கை 2025 நிகழ்வானது புத்தாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடு என்பவற்றைக் கொண்டாடும் ஓர் நிகழ்வாகும். ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தொழில்முனைவோரை வலுப்படுத்துவதன் ஊடாக, அனைத்து இலங்கையர்களுக்கும் உருவாக்குவதற்கு, இணைப்புக்களை ஏற்படுத்த மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட, உள்ளடக்கிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தைக் கட்டியெழுப்புகிறோம். புத்தாக்கம் என்பது கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுதொன்று அல்ல, நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் இது கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் தடவையாக நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் உலகளாவிய தொழில்முனைவு வாரத்தை நாம் சமாந்தரமாக ஆரம்பிக்கின்றோம். வாய்ப்புக்கள் அனைவரையும் சென்றடையும்போதே உண்மையான முன்னேற்றம் ஏற்படும்” என்றார்.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதம ஆலோசகரும், இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவருமான கலாநிதி.ஹான்ஸ் விஜேசூரிய வரவேற்புரை நிகழ்த்தினார். உலகளாவிய பிரதிநிதி சுரேஷ் த.மெல் அவர்களும் உரைநிகழ்த்தினார்.
ஆரம்ப நிலை வர்த்தகங்கள் மற்றும் சிறிய நடுத்தர கைத்தொழில்களுக்கான தனியார் துறை பங்குடமை மற்றும் நிதியளிப்பு என்பவற்றினால் ஏற்படும் தாக்கம் குறித்து ‘எதிர்காலத்தை மேம்படுத்துதல்: கிக் (Gig) மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் விசேட நிகழ்வும் காட்சிப்படுத்தப்பட்டது. பங்குடமை, புத்தாக்கம் மற்றும் ஆரம்ப நிலை வணிகங்களின் வளர்ச்சி தொடர்பில் கவனம் செலுத்தும் ‘2035 கையேடு: இலங்கை தனது அடுத்த தொழில்முனைவோர் சகாப்தத்தை எவ்வாறு உருவாக்குகிறது’ என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வும் இடம்பெற்றது.
GEW 2025 இன் ஆற்றல் மற்றும் மாவட்ட மட்டத்திலான செயற்பாடுகளைப் பதிவுசெய்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து நன்றியுரை, ஊடகச் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு என்பன இடம்பெற்றன.
GEW இலங்கை 2025 நிகழ்வு உத்தியோகபூர்வ அங்குரார்ப்பணத்தைத் தொடர்ந்து செயற்பாடுகளுக்காகத் திறக்கப்பட்டது. இது ஒரு நாடு தழுவிய அணிதிரட்டலுக்கான அறைகூவலாக அமைந்தது. நாடு முழுவதிலுமுள்ள 25 மாவட்டங்களிலும் 900 நிகழ்வுகளை நடத்துவது இந்த வருட நிகழ்வின் இலக்காகும். இந்த முயற்சியானது 250 பங்காளர்களின் பங்குபற்றலுடன் நாடளாவிய ரீதியில் 30,000ற்கும் அதிகமான பங்குபற்றுனர்களின் ஈடுபடுகளைப் பெற்றுக் கொண்டு, முன்னெப்பொழுதும் இல்லாத அளவு தொழில்முனைவோரின் பங்குபற்றலை உருவாக்குவது இதன் இலக்காகும்.
இலட்சியம் மிக்க இந்த இலக்கை அடைவதற்கு விதாதா, NEDA, SED, IDB, NYC மற்றும் NYSC ஆகியவை பங்காளர்களாக இணைந்துள்ளனர். குறிப்பிடத்தக்க வகையில், வலுவான ஆதரவை வெளிப்படுத்தி பல பங்காளர்கள் ஏற்கனவே இந்த முயற்சியில் இணைந்துள்ளனர். இந்த முயற்சியின் அறிமுகமானது இலங்கையின் புத்தாக்கம் மற்றும் ஆரம்ப நிலை வர்த்தகச் சூழலுக்கான அமைப்பை வலுப்படுத்துவதையும், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்கத்தை இணைக்கும் ஒரு தளத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மாவட்ட அளவிலான குழுக்கள் ICTA உடன் இணைந்து நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் உள்ளூர் சமூகங்களின் ஈடுபாட்டை நடைமுறைப்படுத்தும். இதன் மூலம் இந்த முயற்சியானது தொழில்முனைவு வாய்ப்புகள் அடிமட்ட மட்டத்தை சென்றடைவது உறுதிசெய்யப்படும். இந்தத் திட்டம் மாணவர்கள், ஆரம்ப நிலை வணிகங்கள் மற்றும் மற்றும் வணிகத் தலைவர்களை செயலமர்வுகள், மன்றங்கள் மற்றும் புத்தாக்கம் தொடர்பான கண்காட்சிகள் என்பவற்றில் ஈடுபடுத்தும்.
GEW இலங்கை 2025 நிகழ்வின் செயற்பாடுகள் குறித்த மேலதிக தகவல்களை www.gew.icta.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளவும்.

