Nov 17, 2025 - 04:04 PM -
0
மதீனாவுக்கு அருகில் மெக்காவிலிருந்து உம்ரா புனிதப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று டீசல் டேங்கர் லொறி மீது மோதிய விபத்தில், குழந்தைகள் உட்பட 45 இந்தியப் பயணிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கோர விபத்து சவுதி அரேபியாவின் மதீனாவுக்கு அருகில், அதிகாலை 1.30 மணியளவில் (இலங்கை நேரப்படி) முப்ரிஹத் பகுதியருகே இடம்பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் 42 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஹைதராபாத் பொலிஸ் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் விபத்தில் 45 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பேருந்தில் மொத்தம் 46 பயணிகள் இருந்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் இருந்து (பெரும்பாலும் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள்) உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் ஆவர். மெக்காவில் சடங்குகளை முடித்துவிட்டு மதீனாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது.
பலியானவர்களில் 20 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் அடங்குவதாக ஆரம்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் இருப்பது பல குடும்பங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டீசல் டேங்கர் லொறி மீது பேருந்து மோதியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது பெரும்பாலான பயணிகள் உறங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் தப்பிப்பது கடினமாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் உள்ளூர்வாசிகள் முதலில் வந்து மீட்புக் குழுவினருக்கு உதவியுள்ளனர்.
உயிர் பிழைத்த ஒரே நபரான, 24 வயதுடைய முஹம்மது அப்துல் ஷோயிப் என்பவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் சாரதிக்கு அருகில் அமர்ந்திருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ, ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெலுங்கானா முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி, சம்பவம் குறித்து முழுமையான விபரங்களைப் பெற்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து தேவையான நிவாரண உதவிகளை உடனடியாகச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

