Nov 17, 2025 - 04:34 PM -
0
இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது தனது இஸ்லாமிய வாடிக்கையாளர்களின் சிறப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், தனது தெஹிவளை மற்றும் காலிக் கோட்டை கிளைகளில் தனித்துவமான அல் அதாலா (Al Adalah) இஸ்லாமிய வங்கி சேவைப் பிரிவுகளை திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் ஷரீஆ கோட்பாடுகளுடன் முழுமையாக இணங்கும் வங்கிச்; சேவைகளுக்கான வாடிக்கையாளர்களின் அணுகலானது மேலும் விரிவடைந்துள்ளது.
இந்த புதிய பிரிவுகள், வங்கியின் நகர அலுவலகம் கொழும்பு, புறக்கோட்டை பிரதான வீதி, மற்றும் காத்தன்குடி ஆகிய கிளைகளில் நிறுவப்பட்டவற்றைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட நான்காவது மற்றும் ஐந்தாவது அலகுகளாகும்.
இஸ்லாமிய வங்கிப்பிரிவில் பயிற்சி பெற்ற ஊழியர்களைக் கொண்ட இந்தப் பிரிவுகள், கணக்கு திறப்பு, கடன் வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சேவைகளை வழங்கும். சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் திறமையான சேவையை வழங்க ஒவ்வொரு அலகிலும் அர்ப்பணிப்புள்ள இஸ்லாமிய வங்கிப் பிரிவு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொமர்ஷல் வங்கியானது அல் அதலா இஸ்லாமிய வங்கி வர்த்தக நாமத்தின் கீழ், வாடியா யாத் தமான் நடைமுறைக் கணக்கு முதரபா சேமிப்புக் கணக்கு, முதரபா முதலீடுகள், குறைந்து வரும் முஷாரகா, முராபஹா மற்றும் முசாவமா, இஜாரா லீசிங் மற்றும் இறக்குமதி நிதியுதவி உள்ளிட்ட விரிவான தயாரிப்புகளை வழங்குகிறது. இவை அனைத்தும் வங்கியின் ஷரியா சபையின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் வழங்கப்படுகின்றன, இதில் இஸ்லாமிய நிதித்துறையின் சிறந்த நிபுணர்கள் உள்ளனர், இது ஷரியா கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

