இந்தியா
17 வயது பாடசாலை மாணவி குத்திக் கொலை

Nov 19, 2025 - 05:16 PM -

0

17 வயது பாடசாலை மாணவி குத்திக் கொலை

இராமேஸ்வரம் அருகே ஒருதலைக் காதலால் 12ஆம் வகுப்பு மாணவி ஷாலினியை, முனிராஜ் என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாடசாலைக்குச் சென்ற மாணவியை வழிமறித்த அவர், "தனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது" எனக் கூறி இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். 

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தை அடுத்துள்ள சேராங்கோட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் என்பவரது மகள் ஷாலினி (17). இவர் அப்பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்புப் படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல தோழியுடன் பாடசாலைக்குச் சென்றுள்ளார். 

அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமியின் மகன் முனிராஜ் (21) என்பவர் மாணவி ஷாலினியை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மாணவி எவ்வளவு சொல்லியும் காதலை ஏற்க மறுத்ததால், அவர் மீது முனிராஜ் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவி ஷாலினியை வழிமறித்த முனிராஜ், "எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது" எனக் கூறி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

இரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கிய மாணவியை மீட்டு இராமேஸ்வரம் அரசு வைத்தியசாலைக்குச் கொண்டு சென்றனர். அங்கு வைத்தியர்கள் பரிசோதனை செய்த நிலையில், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மாணவி ஷாலினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், கொலை செய்த இளைஞர் முனிராஜை உடனடியாகக் கைது செய்துள்ளனர். 

கொலை செய்வதற்காக அந்த மாணவியை முனிராஜ் பின்தொடர்ந்து வரும் புகைப்படம் வெளியாகி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05