Nov 21, 2025 - 10:49 AM -
0
கொமர்ஷல் வங்கியானது, கொம்பேங்க் சக்தி எனப் பெயரிடப்பட்ட தனது முகவர் வங்கிச் சேவைகளை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் தனது பயணத்தில் மேலும் ஒரு தீர்க்கமான முன்னேற்றத்தை எய்தியுள்ளது.
இந்த மூலோபாய முயற்சித்திட்டமானது, நகரங்களுக்கு தொலைவில் வசிக்கும் சமூகங்களுக்கு அதிக வசதியும் சேவையும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கியானது இலங்கையின் முழுவதும் அதிகாரப்பூர்வ வங்கிச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துகிறது.
அணுகல் தன்மையும் வாடிக்கையாளர் வசதியும் மிக முக்கியமாகி வரும் வங்கித்துறையில், தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் தேவைகளுக்கான முன்முயற்சியாக கொம்பேங்க் சக்தி திட்டம் செயல்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த முறைமையின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் தரப்பு முகவர்களுடன் - பொதுவாக உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுடன் - வங்கி இணைந்து செயல்பட முடியும். இவர்கள் வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடைநிலையாளர்களாக இருந்து, முழுமையான கிளைகளை அமைக்காமல் முக்கிய நிதி சேவைகளை வழங்குவர்.
இந்த அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம், கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர்கள் பண வைப்பு, பணத்தினை மீளப்பெறல், நிதி பரிமாற்றம், பயன்பாட்டுக் கட்டணம் செலுத்துதல் போன்ற அத்தியாவசிய பரிமாற்றங்களை தமக்கு வசதியான, எளிதில் அணுகக்கூடிய இடங்களில் - குறிப்பாக கிராமப்புற மற்றும் போதுமான சேவை இல்லாத பகுதிகளில் - மேற்கொள்ள முடியும். இவ்வசதியானது, வாடிக்கையாளர்கள் தமது நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய அருகிலுள்ள கிளைக்குப் பயணம் செய்ய வேண்டிய நேரத்தையும் செலவையும் குறைப்பதன் மூலம் பெரும் நன்மையை அளிக்கிறது.
கொம்பேங்க் சக்தி முகவர் வங்கிச் சேவைகள், தனது விவசாய மற்றும் நுண்கடன் பிரிவுகள் (AMFU) மேற்கொள்ளும் செயல்பாடுகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது. கிராமப்புற சமூகங்களில் ஏற்கனவே AMFU ஊழியர்கள் மூலம் உருவாக்கப்பட்ட நம்பிக்கைமிக்க உறவுகளையும் சமூகத் தொடர்புகளையும் பயன்படுத்தி, இந்த ஒருங்கிணைந்த முறையின் மூலம் வங்கி நம்பகத்தன்மை மிக்க, தொழில்நுட்ப ஆதரவு கொண்ட ஒரு மாதிரியை வழங்க விரும்புகிறது. இதன் மூலம், வங்கி சேவைகளின் அணுகலை விரிவுபடுத்தி, உள்நாட்டு பொருளாதாரங்களை ஆதரித்து, நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது இந்த முக்கியக் கட்டத்தை குறிக்கும் வகையில், தனது கொம்பேங்க் சக்தி முகவர் வங்கி சேவைகளின் முன்னோடி கட்டத்தை வீரவிலவில் உள்ள இரேஷா ஃபுட் சிட்டியில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்த சேவையானது நடைமுறைப்படுத்தப்படும் விதத்தை நேரடியாக செயல்விளக்க முறையில் காண்பித்தது. இந்த நிகழ்வுக்கு கொமர்ஷல் வங்கியின் பிரதம செயல்பாட்டு அதிகாரி திரு. எஸ். பிரபாகர் தலைமை தாங்கினார். அவருடன் தனிநபர் வங்கிச் சேவைகளின் பிரதிப் பொது முகாமையாளர் திரு. எஸ். கணேஷன், உதவிப் பொது முகாமையாளர் - PBI/SME திருமதி மிதிலா ஷாமினி, உதவிப் பொது முகாமையாளர் - சந்தைப்படுத்தல் திருமதி அஷானி சேனாரத்ன, பிராந்திய முகாமையாளர் திரு. ருவான் பண்டிதரத்ன, சிரேஷ்ட முகாமையாளர் - அபிவிருத்திக் கடன் பிரிவு திரு. மலிக்க டி சில்வா மற்றும் திஸ்ஸமஹாரம கிளை முகாமையாளர் திரு. அமில ரத்நாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்களின் வருகையானது, அனைவரையும் உள்ளடக்கிய வங்கிச் சேவை வழிகளை விரிவுபடுத்துவதிலும், புதிய சமூகங்களைச் சென்றடைய பங்காளர்களுடன் இணைந்து செயல்படுவதிலும் வங்கியின் வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது. இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

