Nov 21, 2025 - 10:52 AM -
0
NDB வங்கியானது, நிலையானதும் நியாயமானதுமான லீசிங் தீர்வுகளுக்கு ஆதரவு வழங்கும் தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், Browns EV (Pvt) Ltd. நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டதன் மூலம் மூலோபாய பங்குடைமையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பானது, Browns EV நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய Wuling மின்சார வாகன வரிசையை, ஈர்க்கக்கூடிய மற்றும் நெகிழ்வான நிதி தீர்வுகளுடன் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வாய்ப்பினை வழங்கவுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்களுக்கு மாறுவது இலங்கையினருக்கு மேலும் எளிதாகும்.
150 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார் வாகனத் துறையின் மரபை பின்பற்றுவதோடு, LOLC குழுமத்தின் கீழ் மேலும் வலுப்பெற்றுள்ள Browns EV, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட Wuling மின்சார வாகனங்களை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியான ஒரு படியை எடுத்துள்ளது. புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட Wuling மின்சார வாகன வரிசையானது, பல்வேறு வாடிக்கையாளர் பிரிவுகளுக்கான விரிவான தெரிவுகளை வழங்குகிறது.
அறிமுக சிறப்பு விலையில் அனைத்து செலவுகளும் சேர்த்து ரூ. 12.4 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்ட Wuling Cloud, சக்திவாய்ந்த, விசாலமான மற்றும் வசதியான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. செயல்திறன் மற்றும் நுணுக்கம் ஆகியவற்றை விரும்பும் குடும்பங்களுக்கு இது சிறந்த தெரிவாகும். அனைத்து செலவுகளும் சேர்த்து ரூ. 8.1 மில்லியனில் கிடைக்கும் Wuling Binguo, நவீன வசதிகளையும் சிறந்த வடிவமைப்பையும் விரும்பும் இளம் தொழில்முறை நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அழகான, சீரான அம்சங்களால் நிறைந்த தீர்வாகும்.
மேலும், Browns EV நிறுவனம் மிகச் சுலபமாகக் கிடைக்கும் BAW E6 மற்றும் E7 மொடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை முறையே ரூ. 4.6 மில்லியன் மற்றும் ரூ. 4.7 மில்லியன் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், புதிய வாகனத்தை நியாயமான விலையில் வாகன உரித்துடைமையை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தப்பங்குடைமை தொடர்பாக NDB வங்கியின் உதவி துணைத் தலைவர் – லீசிங் பிரிவு – டிலும் அமரசிங்க தெரிவிக்கையில் :
“மின்சார வாகனங்கள் இனி தொலைதூர கனவு அல்ல; இலங்கையினருக்கு இலகுவில் எட்டக்கூடிய நிஜமாக மாறியுள்ளன. Browns EV உடனான இந்தப் பங்குடைமையின் மூலம், நம்பகமான, உயர்தர மின்சார வாகனங்களை உரித்துடைமையாக்கிக் கொள்வதை அதிக வசதியானதாகவும் நியாயமானதாகவும் மாற்றும் வகையில், தனிப்பயன் லீசிங் தீர்வுகளை வழங்குவதில் நாம் பெருமைப் படுகிறோம். இது, நிலையான தெரிவுகளை ஊக்குவிக்கும் அதேவேளை, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு உதவ வேண்டுமெனும் NDB வங்கியின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.”
Browns EV நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான பவித்ர ஜயசேக்கர தெரிவித்ததாவது:
“Browns EV இல், ஒவ்வொரு இலங்கையனும் நம்பிக்கையுடன் பசுமை இயக்கத்தை (green mobility) தழுவக்கூடிய முழுமையான சூழலை உருவாக்குவது எமது நோக்கமாகும். Wuling மற்றும் BAW வாகன வரிசையை அறிமுகப்படுத்துவதானது, அனைவருக்கும் நியாயமான விலையில் புதிய, புதுமையான மற்றும் அழகிய வாகனங்களை வழங்கும் எமது முயற்சியை வெளிப்படுத்துகிறது. NDB வங்கியுடனான இந்த பங்குடைமையின் மூலம், மேம்பட்ட மின்சார வாகன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய நிதியுதவியுடன் முழுமையான தீர்வுகளை உருவாக்குவதை நோக்கி நாம் ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்து வருகிறோம், இது அதிகமான இலங்கையர்கள் நம்பிக்கையுடன் நிலையான எதிர்காலத்தை நோக்கி மாறுவதற்கு உதவுகிறது.
இந்தப்பங்குடைமையின் மூலம், NDB வங்கி நெகிழ்வான மீளச் செலுத்தும் திட்டங்கள், விரைவான அனுமதிகள், மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் சேவை போன்ற நன்மைகளுடன் தனிப்பயன் லீசிங் வசதிகளை வழங்கும். நாடு முழுவதும் பரவியுள்ள கிளை வலையமைப்பும், சிறப்பு லீசிங் நிலையங்களும் கொண்ட NDB வங்கியானது, மின்சார வாகனங்களைச் சொந்தமாகக் கொள்வதற்கான நிதி அணுகலை விரிவுபடுத்துவதற்கு தயாரான நிலையில் உள்ளது.
இந்த ஒத்துழைப்பானது, நிலையான புதுமைகளுக்கு ஆதரவு வழங்குவதில் NDB வங்கியின் சிறந்த அர்ப்பணிப்பையும், அடுத்த தலைமுறை நிதி தீர்வுகள் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்தும் முயற்சியையும் வலியுறுத்துவதுடன் மேலும் Browns EV உடன் இணைந்து, இலங்கையர்கள் மின்சார ஓட்டுநர் தொழில்நுட்பத்தை தழுவிக்கொள்ள வழி வகுக்கிறது; இதன் மூலம் NDB வங்கியானது சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் மேலும் தாங்கும் திறன் கொண்டதுமான நாட்டை உருவாக்குவதற்கு பங்களிக்கிறது.
இலங்கையில் பட்டியலிடப்பட்ட நான்காவது பெரிய வணிக வங்கி NDB வங்கியாகும். 2025 ஆம் ஆண்டுக்கான யூரோமணி விருதுகளுக்கான சிறப்பு விருதுகளில், SME-களுக்கான இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாக NDB பெயரிடப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய வங்கி மற்றும் நிதி இதழ் (சிங்கப்பூர்) விருதுகளால் ஆண்டின் உள்நாட்டு சில்லறை வங்கி - இலங்கை மற்றும் இலங்கை உள்நாட்டு திட்ட நிதி வங்கி விருதை வென்றது. NDBஆனது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும், இதில் மூலதன சந்தை துணை நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு தனித்துவமான வங்கி மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகின்றன. டிஜிட்டல் வங்கி தீர்வுகளால் இயக்கப்படும் அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்த வங்கி உறுதிபூண்டுள்ளது.

