Nov 21, 2025 - 01:50 PM -
0
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சிகள் பல இணைந்து ஏற்பாடு செய்துள்ள “மாபெரும் மக்கள் குரல்” பேரணி நுகேகொடை, "ஆனந்த சமரகோன்" திறந்தவெளி அரங்கில் இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எவ்வாறாயினும், இந்த மக்கள் பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன பலய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் கலந்துகொள்ளவில்லை.
பேரணிக்கான ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் இன்று காலை அந்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதற்கிடையில், இந்த பேரணியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸார் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிவிப்பில், பேரணி நடைபெறும் வளாகத்தைச் சுற்றியுள்ள பரீட்சை நிலையங்களில் இன்று (21) மு.ப. 8.30 மணி முதல் மு.ப. 11.40 மணி வரையிலும், பி.ப. 2.00 மணி முதல் பி.ப. 5.00 மணி வரையிலும் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறுவதால், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது அவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும்போது, அந்த வளாகத்திற்குள்ளேயே மட்டும் பயன்படுத்துமாறு பொலிஸார் அமைப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பரீட்சைக்குச் செல்லும் மற்றும் பரீட்சை முடிந்து வெளியேறும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்படுமாறும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, கூட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

