Nov 21, 2025 - 05:50 PM -
0
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளில் ஈடுபட்டதால் தற்காலிகமாக அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும், சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவு முற்றுகையிட்டுள்ளது.
பணியகத்தின் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி மருதானை பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றை நடத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக ஆட்சேர்ப்பு செய்வதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த இடம் நேற்று (20) சுற்றிவளைக்கப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 85 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதன் காரணமாகவே, குறித்த நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குறித்த நிறுவனத்தின் அனுமதிப்பத்திர உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றிய மூன்று அதிகாரிகள் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அங்கிருந்து 256 கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட பல ஆவணங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (21) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு நிறுவனத்திடமோ அல்லது நபரிடமோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர், குறித்த நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான செல்லுபடியான அனுமதிப்பத்திரம் உள்ளதா? அது செல்லுபடியான முகவர் நிலையமாக இருந்தாலும், அதற்குரிய வேலைவாய்ப்புக்கான ஆணை கிடைத்துள்ளதா? என்பது தொடர்பில் ஆராயுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்தைப் பார்வையிடுமாறும் அல்லது 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

