Nov 21, 2025 - 06:51 PM -
0
பாம்பு தீண்டிய நிலையிலும், மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டு, மருத்துவக் கண்காணிப்பின் கீழ் மாணவன் ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இன்று (21) இடம்பெற்றுள்ளது.
நாடு முழுவதும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று இரசாயனவியல் பாடப் பரீட்சை நடைபெற்றது. இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காகப் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரிக்குச் சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலை வளாகத்தினுள் நுழைந்தபோது பாம்பு தீண்டியுள்ளது.
ஆரம்பத்தில் அதனைப் பொருட்படுத்தாத மாணவன், பரீட்சை மண்டபத்திற்குச் சென்று அமர்ந்துள்ளார். எனினும், பாம்பு தீண்டிய இடத்தில் குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அவதானித்த நிலையில், விடயம் உடனடியாக பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாகச் செயற்பட்ட அதிகாரிகள் நோயாளர் காவு வண்டி மூலம் மாணவனைப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
சிகிச்சையின் பின்னர், மீண்டும் நோயாளர் காவு வண்டியில் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்ட மாணவன், வைத்தியர்களின் கண்காணிப்புடன் தனது பரீட்சையைத் தொடர்ந்து எழுதியுள்ளார். பரீட்சை நிறைவடைந்த பின்னர், அவர் மீண்டும் மேலதிக சிகிச்சைகளுக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாளை (22) நடைபெறவுள்ள பரீட்சைக்கும் குறித்த மாணவன் வைத்தியசாலையிலிருந்து நோயாளர் காவு வண்டி மூலமாகவே பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வரப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் உபாதைக்கு மத்தியிலும் கல்வியில் அவர் காட்டிய இந்த ஈடுபாடு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
--

