Nov 21, 2025 - 07:13 PM -
0
வளிமண்டல திணைக்களத்தினால் வழங்கப் பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய நாளை (22) தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், ஏற்படுகின்ற அனர்த்தங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்தார்.
மன்னார் அலுவலகத்தில் இன்று (21) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் இதுவரை குறைந்த அளவு மழைவீழ்ச்சி யே பதிவாகி உள்ளது. எனினும் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் அதிக அளவான மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது. எனினும் குறித்த மழை வீழ்ச்சி காரணமாக மாவட்டத்தில் எவ்வித அனர்த்தங்களும் பதிவாகவில்லை.
மன்னார் மாவட்டத்தில் பருவகால மழை தொடர்பாக மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட கூட்டம் மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. குறித்த முன்னாயத்த கூட்டங்களின் போது வெள்ள அனர்த்த அபாயங்களை குறைப்பது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பருவகால மழை காரணமாக ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தத்தை தடுப்பது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் பல்வேறு திணைக்களங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் உள்ளூராட்சி சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஏனைய திணைக்களங்கள் ஊடாக வடிகான்கள், கழிவு நீர் வாய்க்கால்கள், என்பன துப்புரவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெள்ள நீர் இலகுவாக கடலை சென்றடையக் கூடிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது உயர்தர பரீட்சை இடம் பெற்று வருகின்றன. எனினும் பரீட்சை எழுதுகின்ற மாணவர்களுக்கு எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை. சிறப்பான முறையில் பரீட்சைகள் இடம் பெற்று வருகின்றன. அனர்த்த முகாமைத்துவ நிலையம் மன்னார் வலயக்கல்வி பணிமனை உடன் தொடர்பில் இருந்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
மன்னார் முருங்கன் கட்டுக்கரை குளத்தில் தற்போது 9.4 அடி நீர்மட்டம் காணப்படுகின்றது. எனினும் குறித்த குளம் 11.56 அடி அளவிலேயே வான் பாய்வதற்கான நிலை ஏற்படும். இது வரை மன்னார் மாவட்டத்தில் எவ்வித வெள்ள அனர்த்தங்களும் ஏற்படவில்லை.
தற்போது வளிமண்டல திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய நாளை தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. குறித்த காற்றழுத்த தாழமுக்கம் தொடர்ந்து 23, 24, 25 ஆம் திகதிகளில் வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியை சென்றடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த காலப்பகுதியில் காற்று சுழற்சியாக மாற்றமடையும் என்றும் கூறப்படுகிறது. குறித்த காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும், அவ்வேளையில் காற்றின் வேகம் உயர்வாக காணப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இக்காலப்பகுதியில் அனர்த்தங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் விழிப்புடன், அவதானத்துடனும் இருக்குமாறும் வளிமண்டல திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தல்களை பின் பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
காற்றின் வேகம் அதிகரித்தால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே கடற்தொழிலில் ஈடுபடுகின்ற கடற்தொழிலாளர்கள், அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். காற்றழுத்த தாழமுக்கம் மற்றும் வெள்ளத்தினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்து மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி இலக்கங்கள், 023-2117117 மற்றும் 023-2250133 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவி பணிப்பாளர் தொலைபேசி இலக்கம் 077-2320529 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அனர்த்தம் தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
--

