செய்திகள்
வடமாகாண சுகாதார செயலாளருக்கு மன்னார் நகர முதல்வர் அவசர கடிதம்

Nov 21, 2025 - 07:35 PM -

0

வடமாகாண சுகாதார செயலாளருக்கு மன்னார் நகர முதல்வர் அவசர கடிதம்

மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் மருத்துவ நிபுணர் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு கோரி, மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் இன்று (]21) வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

மன்னார் மாவட்ட மக்களுக்குச் சுகாதாரச் சேவையை வழங்கி வரும் முக்கிய நிறுவனமாக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலை இயங்கி வருகிறது. 

இருப்பினும், இந்த வைத்தியசாலையில் துறைசார்ந்த வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுவதால், சிறிய விபத்துக் காயங்களுக்கும் மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளை உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது. 

குறிப்பாக, மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டிருந்த மயக்க மருந்து வழங்கும் நிபுணர் இடமாற்றலாகிச் சென்றதையடுத்து, தற்போது விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத பாரிய நெருக்கடி நீடிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நோயாளிகளுக்கும் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் இடையில் அதிருப்தி நிலை தொடர்கிறது. 

எனவே, இந்த வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு நகர முதல்வர் டானியல் வசந்தன் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் இந்தப் பாரிய மருத்துவப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த அவசரக் கடிதத்தின் பிரதிகள் வடமாகாண ஆளுநர் உள்ளடங்களாகப் பல சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05