செய்திகள்
இந்திய 'A' அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் 'A' தகுதி!

Nov 21, 2025 - 09:06 PM -

0

இந்திய 'A' அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் 'A' தகுதி!

தொடரின் மிகவும் சவால் மிக்க அணியாகக் கருதப்பட்ட இந்திய 'A' அணியை வீழ்த்தி, 'ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள்' T20 கிரிக்கெட்த் தொடரின் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் 'A' அணி இன்று (21) தகுதி பெற்றது. 

தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியாக நடைபெற்ற இப்போட்டியின் வெற்றியாளர் 'சுப்பர் ஓவர்' (Super Over) மூலம் தீர்மானிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். 

போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களைப் பெற்றது. இதற்குப் பதிலளித்தாடிய இந்திய அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு அதே 194 ஓட்டங்களைப் பெற்றது. 

இந்திய அணியின் வெற்றியீட்ட இறுதிப் பந்தில் 4 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதன்போது பங்களாதேஷ் வீரர்களின் மோசமான களத்தடுப்பு காரணமாக இந்தியாவால் 3 ஓட்டங்களைப் பெற முடிந்ததால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. 

வெற்றியாளரைத் தீர்மானிக்க வீசப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் இரண்டு துடுப்பாட்ட வீரர்களும் முதல் இரண்டு பந்துகளிலேயே ஆட்டமிழந்தனர். 

இதனையடுத்து வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவை என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டும் முதல் பந்திலேயே வீழ்ந்தது. எனினும், வீசப்பட்ட இரண்டாவது பந்து அகலப் பந்தாக அமைந்ததால் பங்களாதேஷ் அணி வெற்றியீட்டியதுடன், இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05