உலகம்
நைஜீரியாவில் 100-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தல்

Nov 22, 2025 - 09:19 AM -

0

நைஜீரியாவில் 100-க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் பாடசாலைகள் குறிவைக்கப்பட்டு மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த தினம் நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இதையடுத்து கடத்தல்காரர்களிடம் இருந்து 2 மாணவிகள் தப்பி ஓடி பொலிஸில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் உதவியுடன் மற்ற மாணவிகளை மீட்கும் முயற்சியில் பொலிஸ் தீவிரமாக இறங்கியது. 

இந்த மீட்பு பணிக்கு உதவுவதற்காக நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அல்–ஹாஜ்ஜி பெல்லோவை கெபி மாகாணத்துக்குச் செல்ல ஜனாதிபதி போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021-ல் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் இவர் முக்கிய பங்காற்றினார். 

இந்நிலையில், நைஜர் மாகாணம் பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலை செயல்படுகிறது. இதன் அருகே மாணவர்கள் தங்கும் விடுதியும் அமைந்துள்ளது. 

அந்த விடுதிக்குள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் 100 மாணவர்களை அந்த கும்பல் கடத்திச் சென்றது. 

ஒரே வாரத்தில் 2-வது முறையாக பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கிடையே, அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி போலா டினுபு அறிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05