Nov 22, 2025 - 11:52 AM -
0
திருமணத்தன்று அலங்காரம் செய்து கொள்வதற்காகச் சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மணமகன் வைத்தியசாலைக்கே சென்று தாலி கட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் தும்போலி, முதலசேரி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் மகள் ஆவணி (25). தனியார் பள்ளி ஆசிரியையான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி பேராசிரியரான ஷாரோன் (32) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெறவிருந்தது.
திருமணத்திற்குத் தயாராவதற்காக, மணமகள் ஆவணி தனது அத்தையுடன் காரில் அருகில் உள்ள அழகு நிலையத்திற்குச் சென்றுள்ளார். காரை ஆவணியே ஓட்டிச் சென்றுள்ளார். வழியில் எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆவணி மற்றும் அவரது அத்தை ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக எர்ணாகுளம் அருகே உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து அறிந்த மணமகன் ஷாரோன், உடனடியாக வைத்தியசாலைக்கு விரைந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மணமகள் ஆவணிக்கு, மருத்துவப் படுக்கையில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டினார்.
மணமகள் விபத்தில் சிக்கியதால் மண்டபத்தில் திருமணம் நடைபெறவில்லை என்றாலும், திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மண்டபத்திற்கு வருகை தந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எவ்வித குறையுமின்றி விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டது.
எதிர்பாராத விபத்து ஏற்பட்ட போதிலும், உறுதி குலையாமல் வைத்தியசாலைக்கே சென்று மணப்பெண்ணின் கரம் பிடித்த மணமகனின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

