Nov 22, 2025 - 05:32 PM -
0
26 பேர் சிதறிச் சாவதற்கும் 64 பேர் நிரந்தர அங்கவீனர்களாக வாழ்வதற்கும் காரணமான ஆனந்த சுதாகரன் ஒரு அரசியல் கைதி அல்ல என்றும் மாறாக அவர் ஒரு பயங்கரவாதி என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் தெரிவித்தார்.
இன்று (22)யாழ்ப்பாணத்தில் உள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நேற்று (21) பாராளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதன் ஆனந்த சுதாகரன் என்னும் கைதியின் விடுதலை பற்றிப் பேசியிருந்தார். ஆனந்த சுதாகரன் ஒரு அரசியல் கைதி என்றும் அவரது பிள்ளைகள் பராமரிக்க ஆளின்றி வெளியே துன்புறுவதாக தெரிவித்து இருந்தார். இவர் உட்பட அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் இந்த ஆனந்த சுதாகரன் யார் என்றோ அல்லது என்ன குற்றம் செய்தார் என்பதையோ கூறாமல் லாவகமாக மறைத்துவிட்டார். அல்லது வழமை போல் அரசியல் தெரியாமல் பாராளுமன்றம் வந்ததால் இதுவும் அவருக்குத் தெரியாமலும் இருக்கலாம்.
2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி மாலை 6.45 மணியளவில் சித்தியநாதன் ஆனந்த சுதாகரன் என்னும் இவரால் பிலியந்தலை பஸ் நிலையத்தில் புறப்படக் காத்திருந்த பஸ்ஸில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 26 பேர் மரணமானார்கள். இறந்தவர்களில் 10 வயதுச் சிறுவன் ஒருவனும் பெளத்த மதகுரு ஒருவரும் 8 பெண்களும் அடங்குவர்.
64 பேர் நிரந்தரமாக ஊனமாக்கப்பட்டனர். கையிழந்து, காலிழந்து, கண்ணிழந்து இன்றும் நடைபிணங்களாக வாழ்கின்றனர்.
இந்தக் குண்டுத் தாக்குதலின் பின்னர் சுமார் 20 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக விசாரிக்கப்பட்டு அந்த சித்தியநாதன் ஆனந்த சுதாகரனுக்கு ஆயுள் தண்டனை கொழும்பு மேல் நீதிமன்றால் 2017 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது.
சாமான்ய நிராயுதபாணிகளான அப்பாவி மக்களைப் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்த ஆனந்த சுதாகரன் எவ்வாறு அரசியல் கைதியாவார் என்றும் அருண் சித்தார்த் கேள்வி எழுப்பினார்.
அரசியல் கைதி என்பவன் தான் வைத்திருக்கும் அரசியல் சித்தாந்தம் காரணமாக ஆளும் அரசுகளை எதிர்த்து வன்முறையின்றிப் போராடி அதிகார பீடங்களால் சிறைக்குள் தள்ளப்பட்டவர்களையே அரசியல் கைதி.
உதாரணமாக மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, ஆங் சங் சூகி, மார்டின் லூதர் கிங் போன்றோரையே அரசியல் கைதி.
ஆனந்த சுதாகரனை விடுவிப்பதும் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதும் அரசின் முடிவு அந்த முடிவு எதுவாக இருந்தாலும் எமக்கு அது பிரச்சினையில்லை. ஆனால் கொலைகாரர்களை அரசியல் கைதி என மக்களுக்குப் பொய் சொல்லக்கூடாது.
ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் குறித்து நாமும் பரிதாபப்படுகின்றோம். தந்தையின் தவறுக்குப் பள்ளைகள் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை. ஆனால் என்றேனும் ஒருநாள் உங்கள் அப்பாவைச் சந்திக்கும் போது,
“ஏன் அப்பா இப்படிச் செய்தீர்கள் எனக் கேளுங்கள். இறந்தவர்களின் பிள்ளைகள் என்ன பாடுபடும் எனக் கேளுங்கள். அந்த நிமிடம் உங்கள் தந்தை , “ஆம் நான் தவறு செய்து விட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என எங்களிடம் அல்ல உங்களிடம் மன்னிப்பு கேட்டு தனது தவறை உணர்ந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் விடுவாராக இருந்தால் அன்று தான் அவர் மீளா நரகத்தில் இருந்து விடுதலை பெறுவார்" என தெரிவித்தார்.
--

