Nov 23, 2025 - 07:05 PM -
0
ஒன்லைன் சூதாட்டத்துக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சட்டவிரோதமாக இயங்கி வரும் ஒன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் இணையதளங்களில், அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டி பணத்தை இழந்து வருகிறார்கள்.
பணத்தை பறிகொடுத்த சிலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இத்தகைய பின்னணி கொண்ட ஒன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு ஆதரவாக விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் சிக்கி உள்ளனர்.
குறிப்பாக, 18 ஆண்டுகளாக உலகளாவிய அங்கீகாரத்துடன் செயல்படுவதாக கூறப்படும் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கு, அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள், நடிகர்-நடிகைகள் ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட ஒன்லைன் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், ராணா, நிதி அகர்வால் உள்பட 29 திரையுலக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும் பணம் பெற்றுக்கொண்டு சட்டவிரோத செயலிகள் மூலம் எளிய மற்றும் நடுத்தர மக்களைச் சூதாட்டத்தில் ஈடுபடத் தூண்டி, அவர்களுக்குப் பண இழப்பை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தெலங்கானா சிஐடி போலீஸாரும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் விஜய் தேவரகொண்டா, ராணா உள்பட பலரிடம் விசாரணை நடந்த நிலையில், நடிகை நிதி அகர்வாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இதையடுத்து அவர் சிஐடி அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
ஒன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதற்காக எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, பண பரிவர்த்தனைகள் எவ்வாறு செய்யப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்ததாகக் கூறப்படுகிறது.
நடிகை நிதி அகர்வால், தமிழில் சிம்பு ஹீரோவாக நடித்த ‘ஈஸ்வரன்’, ரவி மோகன் ஜோடியாக ‘பூமி’, உதயநிதி ஜோடியாக ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கிலும் நடித்து வரும் இவர், இப்போது பிரபாஸின் ‘த ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார்.

