வணிகம்
வலுவான வளர்ச்சி மற்றும் மூலோபாயரீதியான வெற்றிகளுடன் 3 வது காலாண்டில் DFCC வங்கி பிரகாசித்துள்ளது

Nov 24, 2025 - 02:11 PM -

0

வலுவான வளர்ச்சி மற்றும் மூலோபாயரீதியான வெற்றிகளுடன் 3 வது காலாண்டில் DFCC வங்கி பிரகாசித்துள்ளது

2025, மூன்றாவது காலாண்டிலும் தனது எழுச்சி உத்வேகத்தைத் தொடர்ந்துள்ள DFCC வங்கி, உறுதியான ஐந்தொகை வளர்ச்சி, மூலோபாயரீதியான கடன் வழங்கல், மற்றும் ஒழுக்கமுள்ள செயல்பாட்டு முகாமைத்துவம் ஆகியவற்றை அத்திவாரமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள உறுதியான பெறுபேறுகளைப் பதிவாக்கியுள்ளது. குழுமத்தின் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 8.5 பில்லியன் தொகை பதிவாக்கப்பட்டுள்ள அதேசமயம், குழுமத்தின் சொத்துக்கள் 20% ஆல் அதிகரித்து ரூபா 853 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளது. மொத்த மூலதன போதுமை 14.28% ஆக காணப்பட்டமை, வங்கியின் வலுவான நிதியியல் ஸ்தானத்தைப் பிரதிபலிக்கின்றது. 

வங்கி மட்டத்தில் வரிக்கு பின்னரான இலாபமாக ரூபா 13.3 பில்லியன் தொகையை DFCC வங்கி பதிவாக்கியுள்ளதுடன், Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தில் அது கொண்டிருந்த 50% பங்குகளை மூலோபாயரீதியாக விற்பனை செய்தமையின் மூலமாக ஏற்பட்ட ஒரு தடவை ஆதாயம், கடன் துறையில் ஏற்பட்ட 26% வளர்ச்சி, வைப்புக்களில் ஏற்பட்ட 22% வளர்ச்சி ஆகியன அதற்கு பிரதானமாக பங்களித்துள்ளன. ஒழுக்கமான வழியில் கடன் விஸ்தரிப்பு மற்றும் கடன் வழங்கலை உச்சப்பயன் பெறச் செய்தல் ஆகியவற்றின் துணையுடன் பிரதான இலாபத்திறன் தொடர்ந்தும் வலுவாகக் காணப்பட்டது. ஒழுக்கமான கடன் வழங்கல் மற்றும் உறுதியான நடைமுறைக்கணக்கு-சேமிப்புக் கணக்கு (CASA) தளம் ஆகியவற்றின் உந்துசக்தியுடன், தேறிய வட்டி வருமானம் 11% ஆல் அதிகரித்துள்ளமை, வங்கியின் பிரதான செயல்பாடுகள் தொடர்ந்தும் நெகிழ்திறன் கண்டு வருகின்றமையைக் காண்பித்துள்ளது. 

நிலைபேற்றியல் சார்ந்த நிதி வழங்கலில் DFCC வங்கியின் தலைமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சமுத்திரம் சார்ந்த சாதகமான செயல்பாடுகளைக் கொண்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் காலநிலை தகவமைப்பு முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஆதரவளிப்பதற்காக ரூபா 3 பில்லியன் தொகை கொண்ட இலங்கையின் முதலாவது நீலப் பிணைமுறி வழங்கலை ஆரம்பித்தமை 3 வது காலாண்டில் பாரிய மைல்கல்லாக மாறியுள்ளது. வங்கி தனது 70 வது ஆண்டு நிறைவையும் கொண்டாடியுள்ளதுடன், அதனைக் குறிக்கும் வகையில் இக்காலாண்டில் விசேட நிலையான வைப்புத் திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இக்காலப்பகுதியில் DFCC வங்கி நிதியியல் பெறுபேறுகள் ரீதியாக ஈட்டியுள்ள சாதனைகளுக்கு ஈடாக, Great Place to Work சான்று அங்கீகாரம், AICPA & CIMA Top 20 Employers பட்டியலில் 4 வது ஸ்தானம், ICC Emerging Asia Banking Awards விருதுகள் நிகழ்வில் நுண், சிறிய, மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையை விரைவுபடுத்துவதில் (MSME Acceleration) மிகச் சிறந்த வங்கிக்கான வெற்றி, மற்றும் Brand Finance இடமிருந்து இலங்கையின் முதல் 30 ஸ்தானங்களுள் இடம்பெற்றுள்ள மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்களுக்கான அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும், விருதுகளையும் அது சம்பாதித்துள்ளது. 

DFCC வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்: 

“வங்கியின் பிரதான இலாபத்திறன் மற்றும் எமது மூலோபாயத்தை ஒழுக்கமான முறையில் அமுலாக்கம் செய்தல் ஆகியவற்றின் வலிமையை 3 வது காலாண்டில் நாம் பதிவாக்கியுள்ள பெறுபேறுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. வலுவான கடன் மற்றும் வைப்பு வளர்ச்சி, மற்றும் பங்குகள் விற்பனை மூலமான ஆதாயம் ஆகியவற்றின் துணையுடன் வங்கி மட்டத்தில் ஈட்டப்பட்டுள்ள ரூபா 13.3 பில்லியன் இலாபம், பொறுப்புணர்வுமிக்க வழியிலான விஸ்தரிப்பு மற்றும் நிலைபேற்றியல் அடிப்படையிலான மதிப்பு தோற்றுவிப்பு ஆகியவற்றில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. செயல்பாட்டுச் சூழல் தொடர்ந்தும் வலுவாக சீரடைந்து வருகின்ற நிலையில், எமது பிரதான வர்த்தகத்தை ஆழமாக்கி, எமது ஐந்தொகையை வலுப்படுத்தி, மற்றும் எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரதும் நலனுக்காக நீண்ட கால வளர்ச்சியை முன்னெடுப்பதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளோம்.”

Comments
0

MOST READ
01
02
03
04
05