Nov 24, 2025 - 06:48 PM -
0
நினைவாற்றலை இழக்கும் நோய்களில் ஒன்றான அல்சைமர் நோயாளிகளின் அறிவாற்றல் வீழ்ச்சியை குறைப்பதற்கான மருந்தின் இறுதிகட்ட சோதனை தோல்வியடைந்துள்ளதாக நோவோ நோர்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனம் இன்று (24) அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகள் 10% வீழ்ச்சியடைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தகவல் வௌியிட்டுள்ளது.
உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற முக்கிய சிகிச்சைத் துறைகளில் உள்ள குறித்த நிறுவனத்தின் மருந்துகள் கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளன.
இதனால் நிறுவனத்தின் தலைமை, புதிய சந்தை வாய்ப்பினை பெறுவதற்காக அல்சைமர் நோய்க்கான வாய்வழி மருந்தின் சோதனையில் ஈடுபட்டது.
நீரிழிவு மற்றும் எடை குறைப்புக்காக இலட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்படும் GLP-1 மருந்துகள், அல்சைமர் நோயின் தாக்கத்தை மெதுவாக்குமா என்பதற்கான ஒரு அறிகுறியாக நோவோவின் இந்தச் சோதனை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.
இந்தச் சோதனையில் 'ரைபெல்சஸ்' (Rybelsus) என்ற மருந்தே பயன்படுத்தப்பட்டது.
இது 'டைப் 2' நீரிழிவு நோய்க்காக மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாத்திரையாகும்.
அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா (ஞாபக மறதி) நோய்கள் உலகளவில் 55 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கின்றன. இதற்கு நிரந்தர தீர்வு எதுவும் இதுவரை இல்லை.
அத்தகைய சந்தை வாய்ப்பை பெறும் வகையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும். அதில் தோல்வி ஏற்பட்டுள்ளதால் குறித்த நிறுவனத்தின் பங்குகள் உடனடியாக 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

