Nov 25, 2025 - 07:39 AM -
0
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்ச்சைக்குரிய 28 அம்ச அமைதித் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி வரவேற்றுள்ளார்.
ரஷ்யாவின் போர் இலக்குகளுக்குச் சாதகமாக இருந்த சில பகுதிகளை நிராகரித்த பின்னர், உக்ரைனின் ஐரோப்பிய நட்பு நாடுகள் இந்தப் திட்டத்தின் திருத்தப்பட்ட ஆவணத்தை தயாரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இப்போது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடவடிக்கைகளின் பட்டியல் செயல்படுத்தக்கூடியதாக உள்ளதாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல சரியான கூறுகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகளால் ஒக்டோபரில் தயாரிக்கப்பட்ட இந்த திட்டம், கீவ் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த திட்டம் குறித்து விவாதிக்க அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவில் சந்தித்திருந்தனர்.
இதேவேளை இன்று (25) அதிகாலையில், ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள் தலைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தைத் தாக்கியதாகவும், மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் அதனால் தடைப்பட்டுள்ளதாகவும் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்தார்.
நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை உக்ரைன் எரிசக்தி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

