Nov 25, 2025 - 03:41 PM -
0
அண்மையில் வெளியாகியுள்ள உலகளாவிய ஆரம்ப வணிக சூழல் 2025 (GSER) அறிக்கையில் பெங்களூர், டோக்கியோ மற்றும் ஹொங்கொங் போன்ற நகரங்கள் உலகளாவிய புத்தாக்க மாற்றத்தில் முன்னேறியிருப்பதால் ஆசியா முன்னணியில் திகழ்கிறது. இந்த அலையில் இலங்கையும் உள்ளடக்கியிருப்பது முக்கியமானதாகும்.
உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் கிடைத்திருப்பதால் இலங்கையில் தொழில்முனைவுக்குக் காணப்படும் சூழல் பாரியதொரு மாற்றத்துக்கு உள்ளாகிவருகின்றது. Startup Genome இனால் வருடாந்தம் வெளியிடப்படும் உலகளாவிய ஆரம்ப வணிக சூழல் அறிக்கையானது (GSER) ஆசியாவில் வளர்ச்சியுற்றுவரும் புத்தாக்க மையமாக இலங்கையை உறுதியானதொரு ஸ்தானத்தில் நிலைநிறுத்தியுள்ளது.
2022 ஜூலை முதல் 2024 டிசம்பர் வரையான காலப் பகுதியில் இலங்கையின் ஆரம்ப நிலை வணிகங்களுக்கான சூழலின் மதிப்பு 821 மில்லியன் டொலராக அமைந்திருப்பதுடன், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கிலான அதிகரிப்பாகும்.
திறமையாளர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்று என்ற நிலையை இலங்கை தொடர்ந்தும் தக்கவைத்து வருவதுடன், போட்டித் தன்மையான செலவில் உயர் தரத்திலான தொழில்நுட்ப திறமையாளர்களை ஈர்ப்பது மற்றும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் திறமையைக் கொண்டிருப்பதால் இலங்கை அண்மையில் ஆசியாவில் #4 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டது. நிதியைப் பெறுவதில் முதல் 25 நாடுகளில் ஒன்றாகவும், திறன் மற்றும் அனுபவத்தில் முதல் 35 நாடுகளில் ஒன்றாகவும் இலங்கை தரப்படுத்தப்பட்டிருப்பதானது, முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் நீண்ட கால நிலைப்புத் தன்மை என்பன அதிகரித்து வருகின்றமையைப் பறைசாற்றுகிறது.
இந்த அங்கீகாரம் தற்செயலாக இடம்பெற்றதொன்று அல்ல. திட்டமிட்ட மூலோபாய நடவடிக்கை காரணமாக இலங்கையின் ஆரம்ப வணிகத்திற்கான சூழல் உலகளாவிய தடத்தை மேலும் விரிவுபடுத்துகிறது.
இலங்கையின் முன்னணி ஆரம்ப வணிகங்களுக்கான மாநாடு மற்றும் புத்தாக்கத் திருவிழாவாக Disrupt Asia 2025 பல்வேறு கட்டமைப்புக்களில் கீழ் இடம்பெற்றது. இந்த மாநாடு உத்வேகத்தை அதிகரிப்பதில் பங்காற்றியது. செப்டம்பர் மாதம் நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 43 ஆரம்ப வணிகங்களில் முதலிடும் நிறுவனங்கள் மற்றும் ஊக்குவிப்பு வலையமைப்புக்கள், 5,000ற்கும் அதிகமான பங்குபற்றுனர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதற்கு மேலதிகமாக 25 நாடுகளைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் Disrupt Asia மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் 50 ஆரம்ப நிலை வணிகங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், நேரடியான முதலீட்டுக்கான வசதிகள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டதுடன், குறிக்கோளுடன் செயற்படும் தொழில்முனைவோருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் $50 மில்லியன் முதலீட்டுக்கான நிதியங்களுக்கான நிதியமொன்றை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
Disrupt Asia மூலம் ஏற்கனவே செய்யப்பட்ட பணிகள் வெளிப்படையாகத் தெரியும் விதத்திலான விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. உயர் ஆற்றல் கொண்ட டிஜிட்டல் ஆரம்ப வணிகங்கள் தங்கள் அறிவுசார் சொத்தை இலங்கையில் தக்கவைத்துக் கொண்டு தமது வெளிநாட்டு முதலீட்டு மூலதனத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சதவீதத்தை உலகளாவிய துணை நிறுவனங்களில் மீண்டும் முதலீடு செய்ய அனுமதிக்கும் ஒரு முதன்மைத் திட்டத்தை முதலீட்டுச் சபை (BOI) அங்கீகரித்துள்ளது. வெளிநாட்டு ஆரம்ப முதலீட்டு நிதிகளை இலங்கைக்கு ஈர்க்கும் வகையில் புதிய ஆரம்ப முதலீட்டு நிதியத்துக்கான நிதியக் கட்டமைப்பொன்றை உருவாக்க பங்குப் பரிவத்தனைகள் ஆணைக்குழு (SEC) பணியாற்றி வருகின்றது.
மேலும், இலங்கை அரசாங்கம் டிஜிட்டல் நிதியத்திற்கான நிதியத்திற்கு ஆரம்ப மூலதனமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உறுதியளித்திருப்பதுடன், மீதியுள்ள 45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தனியார் மூலங்களிடமிருந்து திரட்ட எதிர்பார்க்கப்படுகின்றன. புதிய உயரத்தை அடைந்திருக்கும் நிலையில் செயற்கை நுண்ணறிவைத் தளமாகக் கொண்ட டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு அடித்தளமிடும் நோக்கில் இலங்கை 2025ஆம் ஆண்டுக்கான தேசிய செயற்கை நுண்ணறிவு கொள்கையை அறிமுகப்படுத்தியது. உட்கட்டமைப்பு, திறமை, விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவது, பொதுச் சேவையை விஸ்தரிப்பதற்கு செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பது போன்றவை இந்தக் கொள்கையின் நோக்கமாகும். உள்ளூர் நிபுணர்களின் திறன்களை மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவின் நிர்வாகத்தில் ஆலோசனைக்கான ஆதரவை உறுதிப்படுத்தவும், கூட்டு ஆராச்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களில் அறிவைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கிலும் இலங்கை அரசாங்கம் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூருடன் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கூட்டாண்மையை ஏற்படுத்தியது.
உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களை இலங்கைக்குக் கொண்டுவரும் நோக்கில் செப்டெம்பர் மாதத்தில் செயற்கை நுண்ணறிவு கண்காட்சி - 2025 முதன் முறையாக இலங்கையில் நடத்தப்பட்டது. இங்கு சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நேரடியாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
விவசாயத் தொழில்நுட்பம் (Agtech), நிதித்தொழில்நுட்பம் (Fintech) மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகள் அரசாங்கத்தின் பின்புலத்தைக் கொண்ட ஊக்குவிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் வளர்ச்சியை எட்டி வருகின்றன. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள GoviLab Agritech ஊக்குவிப்பு வலையமைப்பு மற்றும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தனிப்பட்ட டிஜிட்டல் அடையாள அட்டைக்கான செயற்பாடு போன்றன இந்த முயற்சிகளில் சிலவாகும். இந்த மறுசீரமைப்புக்கள் வெறும் கொள்கை மாற்றங்கள் மாத்திரமன்றி, அவை மிகவும் வலுவான முதலீட்டு சூழலுக்கான அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளாகும். GSER 2025 அறிக்கை இலங்கையின் பலமான நிலைமையை எடுத்துக்காட்டியிருக்கும் அதேநேரம், ஆரம்ப வணிகச் சூழலின் முன்னேற்றத்திற்கு ஆழமான நிதி முதலீடு அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. ஆரம்ப கட்ட வணிகங்களுக்கான முதலீடுகள் உலக சராசரியுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மிகக் குறைவாக உள்ளது என்பதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் உட்கட்டமைப்பு உருவாக்கம், நாடு தொடர்பான பகிரங்க நிலைப்பாடு மற்றும் முதலீட்டாளர்களுடனான ஈடுபட்டை ஏற்படுத்தும் வகையில் Disrupt Asia மாநாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
உலகளாவிய ஆரம்ப வணிகச் சூழலில் காலடியெடுத்து வைப்பதை விஸ்தரிக்கும் நோக்கில் StartupTN Global Summit 2025 மாநாட்டில் இலங்கை பங்கேற்றதுடன், Asia Berlin Summit 2025 இல் பங்கேற்கிறது. அதேநேரம், 2026ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் WebSummit Qatar, LEAP Saudi மற்றும் Echelon Singapore ஆகியவற்றில் பங்கேற்பதற்கும் இலங்கை தயாராகி வருகிறது. இலங்கையின் வலுவான வணிகச் சூழல் குறித்த ஊக்குவிப்பை மேம்படுத்துவது இந்த ஈடுபாடுகளின் நோக்கமாகும்.
உலகளாவிய ஆரம்ப நிலை வணிகங்களை ஈர்க்கும் வகையில் வேகமான ஒருங்கிணைப்புக்கள், வலுவான இணையப் பொறிமுறைப் பாதுகாப்பு, ஆரம்ப வணிகங்களில் முதலிடும் நிறுவனங்களுக்கு சார்பான ஒழுங்குறுத்தல்கள், மெய்நிகர் சிறப்புப் பொருளாதார வலயம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புக்களை உருவாக்கி இலங்கை செயற்பட்டு வருகிறது. துடிப்பான கலாசாரம் மற்றும் 12,000ற்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப தாரிகள் வருடாந்தம் வெளியாகின்றமை போன்ற சாதகமான சூழல்களால் திறமையை அடிப்படையாகக் கொண்ட சேவைகள் மற்றும் உலகளாவிய ரீதியிலான திறமையாளர்களை ஈர்ப்பதற்கான மையமாக இலங்கை மாறிவருகிறது.
நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ள மறுசீரமைப்புக்கள் வலுவான அடித்தளமாக அமைகின்றன. முதலீட்டாளர் பின்தொடர்தல்கள் முன்னேற்றத்தில் இருப்பதாலும், ஆரம்ப வணிகங்கள் விஸ்தரிக்கப்படுவதற்காக ஊக்குவிக்கப்படுவதாலும் 2026ஆம் ஆண்டு விரைவான வளர்ச்சிக்கான ஆண்டாக அமையும் என்பது உறுதியான நம்பிக்கையாகும். இலங்கையின் ஆரம்ப வணிகங்களுக்கான சூழல் தொடக்கநிலையிலிருந்து வேகமாக முன்னேறிச் செல்வதுடன், மீள்தன்மை, இலட்சியம் மற்றும் வளர்ச்சி ஆகியவை ‘An Island Rising’ என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.
Startup Genome இன் நிறுவுனரும் தலைவருமான மார்க் பென்செல் குறிப்பிடுகையில், “விதிவிலக்கான தொழில்நுட்பத் திறமை, வணிகத்திற்கு சாதகமான கொள்கைகள் மற்றும் புதுமையான அரசாங்க ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வளர்ந்துவரும் புத்தாக்கமான அரசாங்கத்தின் ஒத்துழைப்பு என்பவற்றின் ஊடாக இலங்கை புத்தாக்க மையமாக வளர்ச்சியுற்று தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது. மூலோபாய அமைவிடம், டிஜிட்டல் கட்டமைப்புக்களில் மாற்றங்களைக் கொண்டுவரும் வகையிலான செயற்கை நுண்ணறிவு மீதான அக்கறை, ஒழுங்குமுறை மாற்றங்கள் என்பன மேற்கொள்ளப்படுவதால் இலங்கையிலுள்ள ஆரம்ப நிலை வணிகங்களின் உரிமையாளர்கள் தமது வணிகச் செயற்பாடுகளை விஸ்தரிக்கவும், புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொள்ளவும் முடியும். அத்துடன், ICTA உடன் நாம் கொண்டுள்ள நீண்டகால கூட்டாண்மை, உலகளாவிய ஆரம்ப வணிக சூழல் அறிக்கையில் இலங்கை நிலைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் உலகளாவிய ஆரம்ப வணிகக் சூழலை நோக்கி விஸ்தரிப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் பெருமையடைகின்றோம்” என்றார்.

