Nov 26, 2025 - 03:18 PM -
0
தாய்லாந்தின் பல பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
தெற்கு தாய்லாந்தில் ஒன்பது மாகாணங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் 33க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும், கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இடர் முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வார இறுதியில், நவம்பர் 22-ஆம் திகதி முதல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுராட் தனி, நக்ஹொன் சி தம்மாரட், த்ராங், பட்டாலுங், சோங்க்லா, பத்தாணி, யலா மற்றும் நாரதிவத் உள்ளிட்ட மாகாணங்களில் அன்றாட வாழ்க்கைப் பாதித்துள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சேதங்களைக் குறைக்க, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற உள்ளூர் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
நேற்றுமுதல் மீண்டும் வெள்ள நீர் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஹட்யாய் நகரில் உள்ள அதிக ஆபத்துள்ள அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடுமையான வெள்ளத்தைக் கையாளும் முயற்சிகளில் ஒன்றாக சோங்க்லாவில் ஒரு கட்டளை மையத்தை நிறுவ தாய்லாந்து பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை கடந்த ஒருவார காலமாக ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக தாய்லாந்தின் அண்டை நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வியட்நாமில் ஒரு வாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
மலேசியாவில் 19,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின்படி, சுமார் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட மண்சரிவில் மேலும் ஏழு பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

