வணிகம்
2025 மூன்றாம் காலாண்டில் அமானா வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

Nov 27, 2025 - 09:50 AM -

0

2025 மூன்றாம் காலாண்டில் அமானா வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது

அமானா வங்கி உறுதியான இலாபகரத்தன்மையை தொடர்ந்தும் எய்தி, மூன்றாம் காலாண்டில் தனது வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 2.7 பில்லியனை (39% வருடாந்த உயர்வு) பதிவு செய்திருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 1.6 பில்லியனை (44% வருடாந்த உயர்வு) பதிவு செய்து, 2024 முழு நிதியாண்டில் எய்தியிருந்த வரிக்கு முந்திய இலாபத்தை, நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களிலேயே பதிவு செய்து சாதனை படைத்திருந்தது. மூன்றாம் காலாண்டில், வரிக்கு முந்திய இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 91% இனால் உயர்ந்து ரூ. 1.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. வரி அறவீட்டின் பின்னர் இலாபம் ரூ. 0.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது 98% எனும் வருடாந்த உயர்வாகும். 

வங்கியின் வருமானப் பிரிவில், மூன்றாம் காலாண்டில் தேறிய நிதிவசதியளிப்பு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42% இனால் உயர்ந்து ரூ. 2.26 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாத காலப்பகுதியில், தேறிய நிதி வசதியளிப்பு வருமானம் 19% வருடாந்த உயர்வை பதிவு செய்து, ரூ. 6.1 பில்லியனை எய்தியிருந்தது. இதில், 4.2% எனும் நிலையான நிதிவசதியளிப்பு எல்லைப் பெறுமதியும் ஆதரவளித்திருந்தது. வங்கியின் தேறிய தரகு மற்றும் கூலி வருமானம் மூன்றாம் காலாண்டில் 53% இனால் உயர்ந்து ரூ. 417.1 மில்லியனாகவும், முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் 35% வருடாந்த உயர்வை பதிவு செய்து ரூ. 1 பில்லியன் பெறுமதியை கடந்திருந்தது. மூன்றாம் காலாண்டில் மொத்த தொழிற்பாட்டு வருமானத்தில் இது பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், ரூ. 2.8 பில்லியனாக உயர்ந்திருந்தது. 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ரூ. 7.5 பில்லியனாக உயர்ந்திருந்தது. அவை முறையே 34% மற்றும் 15% வருடாந்த வளர்ச்சியை காண்பித்திருந்தன. 

இந்தப் பெறுபேறுகளில் முன்னேற்றகரமான வியாபார சூழல், அதிக வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் உறுதி செய்யப்பட்ட பிரிவுத் தரம் ஆகியன தாக்கம் செலுத்தி, வங்கியின் மதிப்பிறக்க கட்டணங்களில் மீளத்திரும்பலை பதிவு செய்து, மூன்றாம் காலாண்டில் தேறிய தொழிற்பாட்டு வருமானத்தில் 49% உயர்வை பதிவு செய்து ரூ. 3.0 பில்லியனை எய்தவும், முதல் 9 மாத காலப்பகுதியில் 24% உயர்ந்து, ரூ. 7.6 பில்லியனையும் பதிவு செய்திருந்தது. மூன்றாம் காலாண்டில் வங்கி வருமானத்தின் மீதான செலவு விகிதத்தையும் 49%இற்கு உயர்த்தியிருந்தது. 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ஒட்டுமொத்த விகிதாசாரம் 51% ஆக உறுதியடைந்திருந்தது. 2025 முதல் காலாண்டு மற்றும் முதல் அரையாண்டுகளில் பதிவாகியிருந்த 52% மற்றும் 2024இல் பதிவாகியிருந்த 53% என்பதுடன் ஒப்பிடுகையில், உறுதியான வளர்ச்சியாகும். இந்த முன்னேற்றத்தினூடாக, வங்கியின் வரிகளுக்கு முந்திய தொழிற்பாட்டு இலாபம் முதல் 9 மாத காலப்பகுதியில் ரூ. 3.8 பில்லியனை எய்தியிருந்ததுடன், மூன்றாம் காலாண்டில் ரூ. 1.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முறையே 40% மற்றும் 91% வருடாந்த வளர்ச்சியை பிரதிபலித்திருந்தது. அதன் உறுதியான நிதிப் பெறுபேறுகளை மேலும் உறுதி செய்யும் வகையில், வங்கி மொத்த பரந்த வருமானமாக ரூ. 1.9 பில்லியனை இந்த காலப்பகுதியில் பதிவு செய்திருந்தது. இது 70% வருடாந்த வளர்ச்சியாகும். 

முதல் 9 மாத காலப்பகுதியில் வாடிக்கையாளர் முற்பணங்கள் பிரிவில் வங்கி ரூ. 33.2 பில்லியன் அல்லது 30% உயர்வை பதிவு செய்திருந்தது. அதனூடாக, அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் நிதி வசதியளிப்பு மாதிரியினூடாக தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், முற்பணங்கள் ரூ. 144.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. முற்பணங்கள் அடங்கிய மொத்த சொத்துகளில் 71%எனும் தொழிற்துறை முன்மாதிரியை நிறுவியிருந்தது. மக்களுக்கு நட்பான வழிமுறையைக் கொண்டு இயங்கும், வங்கியின் வினைத்திறனான இடர் முகாமைத்துவம் மற்றும் காப்பீட்டு நியமங்கள் போன்றவற்றினால் தொழிற்துறையில் மிகவும் குறைந்த நிலை 3 மதிப்பிறக்க நிதி வசதியளிப்பு விகிதத்தை இந்தப் பெறுபேறுகள் எய்தியிருந்தது. வங்கியின் வைப்புகள் ரூ. 15 பில்லியனினால் அதிகரித்து காலாண்டை ரூ. 169.5 பில்லியனாக நிறைவு செய்திருந்தது. தொழிற்துறையின் சிறந்த CASA விகிதமாக 43%ஐ விட உயர்ந்த பெறுமதியை பேணியிருந்தது. வங்கியின் மொத்த சொத்துகள் அண்மையில் ரூ. 200 பில்லியன் எனும் மைல்கல்லை எய்தி, 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ரூ. 202.6 பில்லியனாக நிறைவடைந்திருந்தது. இது 2024 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 11% உயர்வாகும். 

வங்கி அதன் மேல்நோக்கிய இலாபத்தன்மைப் போக்கை மேலும் பலப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, வங்கியின் பங்கு மூலதன மீதான வருமானம் (ROE) 9.0% ஆக உயர்ந்தது, மேலும் சொத்துக்கள் மீதான வருமானம் (ROA) 1.9% ஆக அதிகரித்தது. வங்கியின் சாதாரண பங்கு அடுக்கு 1 விகிதம் (CET1) 12.7% ஆகவும், மொத்த மூலதன விகிதம் 14.6% ஆகவும் காணப்பட்டது. இந்த விகிதங்கள், முறையே 7% மற்றும் 12.5% என்ற ஒழுங்குபடுத்தல் குறைந்தபட்சத் தேவையை விட அதிகமாகும், இது வங்கியின் ஸ்திரத்தன்மைக்குச் (stability) சான்றளித்திருந்தது. மேலும், 30 செப்டெம்பர் 2025 நிலவரப்படி, வங்கியின் திரவத்தன்மைப் பாதுகாப்பு விகிதங்கள் (LCR) - ரூபாய் மற்றும் அனைத்து நாணயங்களுக்கானது - முறையே 234.0% மற்றும் 173.1% ஆக இருந்தன. அத்துடன், நிகர ஸ்திரமான நிதி விகிதம் (NSFR) 132.5% ஆக இருந்தது. இந்த அனைத்து விகிதங்களும், ஒவ்வொன்றுக்கும் உள்ள குறைந்தபட்சத் தேவையான 100%-ஐ விட வசதியாக அதிகமாக இருந்தன. 

அண்மையில், வங்கி தனது 8ஆவது தொடர்ச்சியான இடைக்கால பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு ரூ. 1.30 வீதம் செலுத்தியிருந்ததுடன், இதுவரையில் செலுத்தியிருந்த அதியுயர் தொகையான ரூ. 716.5 மில்லியன் எனும் தொகையையும் எய்தி, அதன் பங்குதாரர்களுக்கு பெறுமதி உருவாக்கம் எனும் நிலையை பேணியிருந்தது. 

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலாண்டில், PwC மூலம் தீர்மானிக்கப்பட்ட மதிப்புமிக்க இந்திய வர்த்தக சம்மேளனம் (ICC) வளர்ந்து வரும் ஆசிய வங்கி விருதுகள் 2025 (Emerging Asia Banking Awards 2025)-இல் அமானா வங்கி இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. வலிமையான உள்ளூர் வங்கித் துறைக்குள் போட்டியிடும் இந்த உச்ச விருது, அமனா வங்கியின் கடந்த மூன்று ஆண்டுகால தொடர்ச்சியான செயல்பாடு மற்றும் வளர்ச்சி, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட அணுகுமுறை, மற்றும் அதன் வட்டி இல்லாத, மக்கள்-நட்பு மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் வங்கிக் கட்டமைப்பை ஊக்குவிப்பதில் அதன் முன்னோடிப் பங்கு ஆகியவற்றை அங்கீகரிக்கிறது. பெரிதும் விரும்பப்படும் இந்த விருதைத் தவிர, அமானா வங்கி சொத்துத் தரத்தில் சிறந்த செயல்பாட்டிற்கான (Best Performance on Asset Quality) விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்டது. இது வங்கியின் ஒழுங்கமைந்த கடன் மேலாண்மை, விவேகமான இடர் மதிப்பீடு மற்றும் வலுவான நிதி மீள்திறனைக் (financial resilience) காட்டுகிறது. மேலும், தெற்காசியாவின் இஸ்லாமிய நிதி மன்ற விருதுகள் 2025-இல், இந்த வங்கிக்கு தெற்காசியாவின் தசாப்தத்தின் இஸ்லாமிய வங்கி’ (South Asia’s Islamic Bank of the Decade) என்ற கௌரவமும் வழங்கப்பட்டது. 

வங்கியின் அண்மைய நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “2025 ஆம் ஆண்டில் நாம் எய்தியிருந்த உறுதியான நிதிப் பெறுபேறுகளினூடாக பங்காளர்களுக்கு நிலைபேறான பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான எமது அர்ப்பணிப்பு மற்றும் மூலோபாயத்தை மீள உறுதி செய்துள்ளது. இலாபகரத்தன்மையை நாம் தொடர்ச்சியான மேம்படுத்தியுள்ளதுடன், ஒழுக்கமான வளர்ச்சி மற்றும் உறுதியான ஐந்தொகையை பேணியுள்ளோம். அதனூடாக, அமானா வங்கியை உறுதியான தொழிற்பாட்டு சூழலில் நிலைநிறுத்தியுள்ளோம். இந்த தொடர்ச்சியான போக்கு மற்றும் நோக்கு ஆகியன (ICC) வளர்ந்து வரும் ஆசிய வங்கி விருதுகள் 2025 (Emerging Asia Banking Awards 2025) இல் இலங்கையின் சிறந்த வங்கி எனும் கௌரவிப்பைப் பெற்றிருந்ததனூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமானா வங்கியின் திரண்ட அர்ப்பணிப்பான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது அமைந்திருந்தது.” என்றார். 

முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம செயற்பாட்டு அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “மூன்றாம் காலாண்டில் எமது வினைத்திறனான செயற்பாடு என்பதில், இலாபம் சுமார் இரட்டிப்பாக உயர்ந்திருந்ததுடன், எமது திட்டங்களின் நிறைவேற்றத்தில் வங்கி வினைத்திறனான வகையில் கவனம் செலுத்தியிருந்தமையை வெளிப்படுத்தியிருந்தது. முற்பணங்கள் பிரிவில் பதிவாகியிருந்த பெருமளவான வளர்ச்சியுடன், தொழிற்துறையின் மிகவும் குறைவான நிலை 3 மதிப்பிறக்க விகிதங்களும் பேணப்பட்டிருந்தது. அதனூடாக, எமது வியாபார மாதிரியின் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒழுக்கமான பிரிவு முகாமைத்துவம் பேணப்படுகின்றமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எமது பயணத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்கையில், மக்களுக்கு நட்பான மற்றும் அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் வங்கியியல் அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் எம்மை உறுதியாக அர்ப்பணித்துள்ளோம். அவற்றினூடாக தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு வலுவூட்டல்கள் வழங்கப்படுவதுடன், நம்பிக்கை மற்றும் நோக்குடன் முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த போக்குடன், எமது வினைத்திறனை மேலும் மேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவதோடு, உறுதியான வெற்றிகரமான செயற்பாடுகளுடன், மற்றுமொரு ஆண்டை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கிறோம்.” என்றார். 

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 25 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. 

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05