Nov 27, 2025 - 01:15 PM -
0
கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் நீர் தேக்கத்திலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதனால் சென்கிளையார் நீர் வீழ்ச்சியில் நீர் சீறிப்பாய்கின்றன.
கொத்மலை ஓயாவிற்கு கீழ் பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நீர் தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே வேளை தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக டெவோன் சென்கிளையார் நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டம் சடுதியாக உயர்ந்துள்ளது இதனால் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக அருகில் செல்வதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு பிரிவினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே வேளை நோட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் அனைத்து வான்கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றனர் இதனால் களனி கங்கையை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக ஹட்டன் நுவரெலியா வீதியில் பல இடங்களில் மண்திட்டுக்கள் சரிந்து பிரதான வீதியில் வீழ்ந்துள்ளன. இதனால் அதிகமான இடங்களில் ஒரு வழி பாதையிலேயே வாகன போக்குவரத்து இடம்பெறுகின்றன.
எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயணிக்க வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
--

