Nov 27, 2025 - 03:15 PM -
0
மலையகத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள தொடர் லயன் குடியிருப்பின் பின்னால் இருந்த பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (27) முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த குடியிருப்புக்குப் பின்னால் இருந்த மண்மேடு சரிந்து விழுந்ததில், மூன்று குடியிருப்புகளைச் சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரு பாரிய மண்மேடு சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
இதேவேளை காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு பகுதியில் உள்ள கிளை ஆற்றில் வெள்ள நீர் அடிக்கடி பெருக்கெடுக்கின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், வாகனச் சாரதிகள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஆற்றினை ஆழப்படுத்தித் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--

