Nov 28, 2025 - 09:10 PM -
0
தற்போது பாகிஸ்தானில் முத்தரப்புத் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த சுற்றுப் பயணத்திற்கான பணம் மற்றும் போட்டிக் கட்டணங்களை நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளது.
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, பேஸ்புக் பதிவொன்றில், தாயகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாக இலங்கையர்கள் எதிர்கொள்ளும் நிலைமையால் வீரர்களும், பணியாளர்களும் வருத்தம் அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஒரு அணியாக, எங்களின் இதயம் உங்கள் அனைவருக்காகவும் துடிக்கிறது, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதற்காகப் பாகிஸ்தான் தொடரிலிருந்து சுற்றுப்பயணப் பணம் மற்றும் போட்டிக் கட்டணங்களை நன்கொடையாக வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் நாடு திரும்பியவுடன் மேலும் பலவற்றைத் தொடர்ந்து செய்வோம். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் மற்றும் இந்தச் சவாலான நேரத்தில் ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுங்கள்.
அனைத்து இலங்கையர்களுடனும் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம், என்று சனத் ஜயசூரிய, அணி மற்றும் பணிக்குழாமினர் சார்பில் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயல் காரணமாக நாட்டில் இதுவரை 69 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

