செய்திகள்
சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் - சஜித்

Nov 28, 2025 - 10:32 PM -

0

சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் - சஜித்

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தளர்த்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். 

அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

டிட்வா புயலால் உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தவர்கள், இடம்பெயர்ந்துள்ளவர்கள், வீடுகளை இழந்துள்ளவர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்களையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் பெரும் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மக்களுடன் எதிர்க்கட்சி முன்நிற்கிறது. 

மேலும், இந்த அனர்த்ததால் ஏற்படும் அசௌகரியம், அழுத்தம், துக்கம் மற்றும் இடர்பாடுகள் வலிகளைக் குறைக்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் பெற்றுத் தர முடியுமான அனைத்தையும் செய்யும். 

இந்த அனர்த்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்க பலத்தைப் பெற்றுத் தருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியும் முழு எதிர்க்கட்சியும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யத் தயாராக உள்ளன. 

உள்நாட்டு தனவந்தர்கள், உள்நாட்டு நன்கொடையாளர்கள், சர்வதேச தனவந்தர்கள், சர்வதேச நன்கொடையாளர்கள், உள்நாட்டு அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், சர்வதேச அரசு மற்றும் அரசு சாரா பல்வேறு அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை உதவிகள், சர்வதேச பிராந்திய முகவராண்மைகள் ஊடாக நமது நாட்டு மக்களுக்கு அதிகபட்ச உதவி கிடைப்பதை உறுதி செய்யும் விடயத்தில் எமது கடமையையும் பங்கையும் நிறைவேற்றி வருகிறோம். 

இதுபோன்ற ஒரு நேரத்தில், நமது நாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைத் தளர்த்துமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டுக்கொள்கிறேன். 

நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்நேரத்தில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும், நலன்புரி மற்றும் அபிவிருத்தி உதவிகள் மூலம் அவர்களின் நாளாந்த ஜீவனோபாயம், குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் நீடித்த வாழ்க்கையை வலுப்படுத்துவதும் இங்கு அவசியமான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன. 

ஆகையால், சர்வதேச நாணய நிதியம் நாட்டின் மீது விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தளர்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இந்த அனர்த்தால் அழிந்து போன மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், அனர்த்தத்தைச் சந்தித்துள்ள பிரதேசங்களை மீண்டும் அபிவிருத்தி செய்யவும் தேவையான உதவிகளை வழங்குமாறு உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை நாம் கேட்டுக்கொள்கிறோம். 

இந்நேரத்தில், மேலும் மேலும் கடன்களைப் பெற்று நாட்டை கடன் பொறிக்குள் அடைப்பதற்குப் பதிலாக, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பத் தேவையான உதவிகளைப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சர்வதேச சமூகத்திம் கோரியுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், எதிர்க்கட்சியின் சகல உறுப்பினர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு, இந்த பேரனர்த்தால் பாதிக்கப்பட்ட நாட்டைக் கட்டியெழுப்ப சர்வதேச ஆதரவுக்கான மாநாட்டைக் கூட்டுமாறு நான் அரசாங்கத்திடம் கோருகின்றேன். 

இந்த பேரனர்த்த சூழ்நிலையால் ஏற்பட்ட பேரழிவிலிருந்தும், நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்தும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். 

கடன் பெற்று இதனைச் செய்ய முடியாது. அதனை தாங்கும் நிலையில் நாடும் நாட்டு மக்களும் இல்லை. எனவே கடனை விடுத்து, உதவிகளைப் பெற்றுத் தாருங்கள். 

நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அனர்த்தம் தொடர்பில் உலகின் கவனத்தை எமது பக்கம் ஈர்த்து, நமது நாட்டிற்கு நேர்மறையான, முற்போக்கான உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டான முன்னெடுப்பை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தாம் தயார் என்றும், இதற்கு எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் பூரணமாகப் பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05