Nov 28, 2025 - 10:58 PM -
0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாகக் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் மாத்திரம் இதுவரை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், மோசமான வானிலை காரணமாகப் பல பகுதிகளில் இன்றும் பல மண்சரிவுகள் பதிவாகியுள்ளன.
கண்டி ஹசலக பமுனுபுர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன், பதுளை மாவட்டத்தைப் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
மண்சரிவுகள் காரணமாக 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கேகாலை புலத்கொஹுபிட்டிய தேதுகல பிரதேசத்தில் 5 வீடுகள் மண்சரிவில் சிக்கியுள்ளன.
அந்த வீடுகளில் இருந்த சுமார் 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அந்த இடத்தைச் சென்றடைவது கடினமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்ச மழைவீழ்ச்சி மாத்தளை கம்மடுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அங்கு 540.6 மில்லிமீட்டர் வரையான அளவில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், மாத்தளை கந்தேநுவர, கேகாலை டொத்தெலு ஓயா தோட்டம், கண்டி நில்லம்பே மற்றும் கண்டி மாரஸ்ஸன ஆகிய பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் 400 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்துள்ளது.
டிட்வா' புயல் தாக்கம் காரணமாகப் பல மாவட்டங்களில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தத் தொடர்ச்சியான மழை காரணமாக மகாவலி, களனி, களு மற்றும் மாணிக்க கங்கை தாழ்நிலங்கள் அத்துடன், தெதுரு ஓயா, மகா ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா தாழ்நிலங்களை அண்மித்த பல பகுதிகளில் பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
களு கங்கையின் தாழ்நிலப் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெல்மதுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத உட்படப் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
களுத்துறை மாவட்டத்திலும் களுத்துறை, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொடை, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல மற்றும் அகலவத்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன், மகாவலி கங்கை பேராதனை மற்றும் நாவலப்பிட்டிப் பகுதிகளில் பெருக்கெடுத்ததால் பாரிய வெள்ள நிலைமை ஏற்பட்டது.
இதேவேளை அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதிகளில் பல இடங்களில் தற்போது அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருவதால், கம்பஹா நகரத்திற்கு விசேட வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ளது.
அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா வடிநிலங்களில் உள்ள தாழ் நிலப் பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் பாரிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலைமையிலிருந்து உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

