Nov 29, 2025 - 05:43 PM -
0
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகத் தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணையத்தள தொடர்பாடல் வலையமைப்புகளை உடனடியாக வழமைக்குத் திருப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, அரசாங்கத்திற்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையில் இன்று (29) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகம், 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகம், டிஜிட்டல் அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன.
நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒலிபரப்பு கோபுரங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டமை மற்றும் வலையமைப்பு செயலிழப்பினால் மக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமை குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது.
மின்சாரம் தடைப்பட்டுள்ள கோபுரங்களுக்கு உடனடியாக மின்தோற்றிகள் (generators) அல்லது மாற்று வலுசக்தியை வழங்க, குறித்த நிறுவனங்களுக்கும் மின்சார சபையிற்கும் இடையில் நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.
சேதமடைந்த கோபுரங்களைச் சீரமைக்கத் தேவையான தொழில்நுட்பக் குழுக்களை அனர்த்தப் பகுதிகளுக்கு அனுப்ப, அரசாங்கத்தின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்பை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
அனர்த்த வேளைகளில் வலையமைப்பு நெரிசலைக் குறைத்து, அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க சேவை வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் முழுமையானத் தலையீட்டை வழங்குவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதன்போது வலியுறுத்தினார்.

