வணிகம்
கொமர்ஷல் வங்கி பொலன்னறுவையில் நெல் விளைச்சலை அதிகரிக்க விவசாய நவீனமய முயற்சிகளை முன்னெடுக்கிறது

Dec 1, 2025 - 03:09 PM -

0

கொமர்ஷல் வங்கி பொலன்னறுவையில் நெல் விளைச்சலை அதிகரிக்க விவசாய நவீனமய முயற்சிகளை முன்னெடுக்கிறது

இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களை வலுப்படுத்தவும், நிலையான விவசாயத்தை மேம்படுத்தவும் தனது நீண்டகால அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் முக்கியமான அரிசி உற்பத்தி பிராந்தியங்களில் ஒன்றான பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் உற்பத்தித்திறனை உயர்த்துவதையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட மேலும் ஒரு முக்கிய முயற்சியை ஆரம்பித்துள்ளது. 

இதற்கிணங்க வங்கியின் அபிவிருத்திக்கடன் பிரிவு, அதன் கதுருவெல கிளையுடன் இணைந்து, பொலன்னறுவை மாவட்டத்தில் சிறந்த விவசாய நடைமுறைகள் (GAP) மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாயம் மூலம் நெல் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் தொடக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை அண்மையில் நடத்தியது. 

கிரித்தலேயில் அமைந்துள்ள அக்போ ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, எட்டு மாவட்டப் பிரிவுகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒருங்கிணைத்தது. இது மாவட்டத்தின் பல்வகை விவசாய சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தியது. தேசிய உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல், மேலும் நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையை உருவாக்கும் அறிவுப்பகிர்வு மற்றும் நிலையான விவசாயத் தீர்வுகள் மூலம் விவசாயிகளை ஆதரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய கொமர்ஷல் வங்கியின் விரிவான நோக்கத்தின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டது. 

இந்த முயற்சியானது உள்நாட்டு நெல் பயிர்ச் செய்கையில் நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் உற்பத்தித்திறன் குறைபாட்டை சமாளிப்பதற்காகவடிவமைக்கப்பட்டது. தற்போது பொலன்னறுவையின் சராசரி விளைச்சல் ஹெக்டேயருக்கு சுமார் 4.5 மெட்ரிக் தொன் என்ற நிலையில் இருந்தாலும், விவசாய நிபுணர்கள் சாத்தியமான உற்பத்தியை ஹெக்டேயருக்கு சுமார் 6 மெட்ரிக் தொன்னாக மதிப்பிடுகின்றனர். இந்த இடைவெளியை குறைக்க உதவுவதற்காக, நவீன விளைச்சல் முறைகள், விவசாய இரசாயனங்களின் பொறுப்பான பயன்பாடு, இயந்திரமயமாக்கல், நிதி முகாமைத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை குறித்து விழிப்புணர்வை உருவாக்குவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருந்தது. 

இந்த ஒன்றுகூடலில் உரையாற்றியவர்களில் வங்கிப் பிரதிநிதிகள், விவசாயத்துறை அதிகாரிகள், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை மத்திய வங்கி – வடமத்திய பிராந்தியம், A. Baur & Co. and Browns Agriculture ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங்குவர். இந்நிகழ்வின் அமர்வுகளில் GAP கொள்கைகளைப் பின்பற்றுதல், உயர் தொழில்நுட்ப விவசாய முறைகள், விவசாய உள்ளீடுகளின் நிலையான பயன்படுத்தல், மேலும் நெல் இயந்திரங்களில் உருவாகி வரும் புதிய தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய தலைப்புகள் விவாதிக்கப்பட்டன. 

இந்நிகழ்வினைப் பற்றி கொமர்ஷல் வங்கியின் – தனிநபர் வங்கி/ சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் பிரிவின், உதவிப் பொதுமுகாமையாளர் திருமதி மிதிலா ஷாமினி அவர்கள் பின்வருமாறு கருத்துத்தெரிவித்தார், இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் ஆகும், மேலும் அதன் மாற்றமானது எமது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் கிராமங்களின் வளமான வளர்ச்சிக்கும் பிரதானமானதாகும்.கொமர்ஷல் வங்கியில், அறிவு, தொழில்நுட்பம் மற்றும் நிதி உட்சேர்க்கை மூலம் விவசாயிகளை வலுப்படுத்துவதுதான் இந்த மாற்றத்துக்கான முக்கியத் திறவுகோல் என்று நாம் நம்புகிறோம். பொலன்னறுவையில் எமது முயற்சியானது வெறும் விளைச்சலை உயர்த்துவதற்காக மட்டுமல்ல – அது வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது, கிராமிய வர்த்தகங்களை நவீனப்படுத்துவது, மேலும் எதிர்கால தலைமுறைகளுக்காக விவசாயத்தின் நிலைத்தன்மையை உறுதிசெய்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும். 

இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Comments
0

MOST READ
01
02
03
04
05