வணிகம்
SLIM ஏற்பாட்டில் இலங்கையில் முதல்முறையாக இடம்பெற்ற World Marketing Forum 2025 நிகழ்வு

Dec 1, 2025 - 03:16 PM -

0

SLIM ஏற்பாட்டில் இலங்கையில் முதல்முறையாக இடம்பெற்ற World Marketing Forum 2025 நிகழ்வு

இலங்கையின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக சமூகத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தவண்ணம், நாட்டில் முதல்முறையாக இடம்பெற்ற World Marketing Forum (WMF) 2025 நிகழ்வை 2025 நவம்பர் 11 முதல் 16 வரை இலங்கை சந்தைப்படுத்தல் கற்கைநிலையம் (Sri Lanka Institute of Marketing - SLIM) மிகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்துள்ளது. 

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்துடன், ஆசிய சந்தைப்படுத்தல் சம்மேளனத்துடன் (Asia Marketing Federation) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சர்வதேச நிகழ்வு, மவுண்ட் லவினியா ஹோட்டல் மற்றும் கொழும்பின் பல இடங்களில் இடம்பெற்றதுடன், உலகெங்கிலுமிருந்து புகழ்பூத்த சந்தைப்படுத்தல் துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், முதலீட்டாளர்கள், மற்றும் புத்தாக்குனர்கள் என பலரையும் ஈர்த்துள்ளது. 

ஆறு தினங்களாக இடம்பெற்ற இந்த அமர்வு, எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மீதான முதலீடு ஆகியவற்றுக்கான பிராந்திய மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதை ஊக்குவித்துள்ள அதேசமயம், சர்வதேச சந்தைப்படுத்தல் பரப்பை வழிநடாத்துவதில் தேசத்தின் சாத்தியங்களையும் எடுத்துக்காட்டியுள்ளது. இடைச்செயற்பாட்டு அமர்வுகள், பிரதான உரை வடிவிலான படைப்பாக்கங்கள், மற்றும் வல்லுனர்கள் தலைமையிலான கலந்துரையாடல்கள் என பல்வேறு விடயங்கள் இந்நிகழ்வில் உள்ளடங்கியிருந்ததுடன், தொழில்நுட்பவியல் பரிணமிப்பு, நிலைபேற்றியல், மற்றும் சர்வதேச இணைப்புத்திறன் கொண்ட யுகத்தில் சந்தைப்படுத்தலின் எதிர்காலம் குறித்து ஆராயப்பட்டது. 

“இதனை வெறுமனே ஒரு மாநாடு என்ற பதத்திற்குள் அடக்கி விட முடியாது. இது இலங்கையின் ஆற்றல்கள் மீதான நம்பிக்கையை எடுத்துக்காட்டும் மேடையாக அமையப்பெற்றது,” என்று SLIM ன் தலைவர் பேராசிரியர் (கலாநிதி) ஜெயந்த தேவசிறி அவர்கள் குறிப்பிட்டார். “World Marketing Forum 2025 நிகழ்வை நடாத்தியமை, சர்வதேச சந்தைப்படுத்தல் சிந்தனைத் தலைமைத்துவத்தின் மையமாக எமது நாட்டை நிலைநிறுத்தியுள்ளதுடன், சர்வதேச வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்திற்கு முக்கியமான உரையாடல்களை வளர்ப்பதில் எமது தயார்நிலையை எடுத்துக்காட்டியுள்ளது.” அதே உணர்வுகளை எதிரொலித்த WMF 2025 செயற்திட்ட தலைவர் அசங்க பெரேரா அவர்கள் கூறுகையில், “இந்நிகழ்வை நடாத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன் இதனை பணிவாக ஏற்றுக்கொண்டுள்ளோம். சர்வதேச கூட்டுத்தாபனங்கள், வர்த்தக நிபுணர்கள், மற்றும் தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பங்குபற்றியுள்ள WMF 2025 நிகழ்வு, சர்வதேச உறவுமுறைகளை வலுப்படுத்தியுள்ளது மாத்திரமன்றி, சந்தைப்படுத்தல் மகத்துவத்தினூடாக பொருளாதார மேம்பாட்டை முன்னெடுப்பதில் SLIM ன் தூரநோக்கினையும் உறுதிப்படுத்தியுள்ளது.” 

ஒருவருக்கொருவர் அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பளிப்பும் வரவேற்பு வைபவங்கள், கருப்பொருள்களை மையப்படுத்திய கருத்தரங்குகள், கைத்தொழில் கண்காட்சிகள், மற்றும் கூட்டாளர் நிகழ்வுகள் உள்ளிட்ட விரிவான நிகழ்ச்சிநிரலை World Marketing Forum 2025 நிகழ்வு கொண்டிருந்ததுடன், கற்றல், ஒத்துழைப்பு, மற்றும் மூலோபாய ரீதியான உரையாடல் ஆகியவற்றையும் வளர்க்க உதவியுள்ளது. 

இந்த அமர்வு பல நாடுகளுக்கு இடையில் சுழற்சி முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதுடன் காரணமாக, WMF நிகழ்வை நடாத்துவதற்கு இலங்கைக்கு இம்முறை கிடைக்கப்பெற்ற இந்த அரிய வாய்ப்பை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு இன்னும் 70 ஆண்டுகள் வரை இலங்கை காத்திருக்க வேண்டிய சூழ்நிலையில், இது உண்மையில் வாழ்நாளில் அரிதாகக் கிடைக்கப்பெறும் ஒரு சாதனையாக மாறியுள்ளது. சந்தைப்படுத்தல் கல்வி, புத்தாக்கம், மற்றும் உலகளாவிய கூட்டாண்மை ஆகியவற்றை முன்னேற்றுவதில் தேசிய அளவில் முன்னிலை வகித்து வரும் SLIM ன் வகிபாகத்தை இந்நிகழ்வின் வெற்றி அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. 

World Marketing Forum நிகழ்வை கொழும்பில் இடம்பெறச் செய்ததன் மூலமாக, இலங்கையின் சந்தைப்படுத்தல் சமூகத்திற்கு வலுவூட்டி, உலக அரங்கில் தேசத்தின் ஸ்தானத்தை உயர்த்துவதில் தனது ஓயாத இலக்கினை SLIM மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05