Dec 1, 2025 - 11:45 PM -
0
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர்களை இன்று (1) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புகள் பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சந்திப்பை மேற்கொண்டதோடு, தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிப்பைச் சந்தித்திருக்கும் இலங்கைக்கு உதவிகளைப் பெற்றுத் தருமாறும் தூதுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளம் வடிந்த பிற்பாடு, ஏற்படக்கூடிய பேரிடருக்குப் பிந்தைய தொற்றுநோய் சூழ்நிலைகளை எதிர்கொள்ள நாட்டின் சுகாதார சேவைகளை மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், பல வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாலும், ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்து பாதைகள் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாலும், அவற்றை புனர்நிர்மாணிக்க வேண்டிய தேவை காணப்படுவதனால், இதற்குத் தேவையான உதவிகளை இலங்கைக்குப் பெற்றுத் தருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.
நீண்டகால நெருங்கிய நட்பு நாடாக, கொரிய குடியரசு எமது நாட்டின் திறமையான ஆற்றல் மிக்க இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததுபோல, இச்சந்தர்ப்பத்திலும் ஒரு நாடாக மீண்டும் எழுந்து நிற்கத் தேவையான பக்க பலத்தை எமக்குப் பெற்றுத் தருமாறு கொரிய தூதரிடம் கோரிக்கை விடுத்தார்.
அதேநேரம் தற்போதைய பேரிடர் நிலைமை மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நிலைமைகளை கடந்து செல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தால் முடிந்த அதிகபட்ச பங்களிப்பை நாட்டுக்குப் பெற்றுத் தருமாறு ஐரோப்பிய ஒன்றிய தூதுவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

