Dec 3, 2025 - 11:23 AM -
0
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 இற்குப் பகுதி அல்லது முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அந்தச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 126 தற்போது வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 30 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சீர்செய்யப்பட்டு வருகின்றன.
மீவத்துர சுத்திகரிப்பு நிலையத்தை இன்று செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும், அது செயற்படுத்தப்படுவதன் மூலம் பிலிமத்தலாவ மற்றும் கெலி ஓயாவுக்கு நீர் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கண்டி நீர் வழங்கல் செயல்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நகரின் எல்லைக்குள் பகுதி அளவில் மட்டுமே நீர் வழங்கப்படுவதாகவும், கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு முழுமையாக நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தன பண்டார தெரிவித்தார்.
கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயற்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள செயலிழந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களை சீர்செய்வதன் மூலம் அடுத்த சில நாட்களில் 100% நீர் விநியோகத்தை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

