Dec 3, 2025 - 11:51 AM -
0
அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், புதையல் தோண்டும் நவீன கருவி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலொன்றிற்கமைய, குறித்த கருவி மீட்கப்பட்டு பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட ஜேர்மனியத் தயாரிப்பான குறித்த கருவி, நிலத்தடியில் உள்ள தங்கம் உள்ளிட்ட புதையல்களை இலகுவாகக் கண்டறியக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வேறு ஏதேனும் சட்டவிரோதமான பொருட்கள் உள்ளனவா என்பது தொடர்பில், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் ஆலோசனைக்கு அமைய, பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான பி. கஜேந்திரனின் வழிகாட்டுதலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் சொகுசு இருக்கைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி மற்றும் இரண்டு மெகசீன்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸ் குழுவொன்று, கடந்த சனிக்கிழமை (22) மாலை குறித்த துப்பாக்கியை மீட்டுச் சென்றுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது கடந்த காலங்களில் அப்பகுதியில் இயங்கிய ஆயுதக் குழுக்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தர், கடந்த 07 வருடங்களாகக் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையமொன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது தந்தை சட்டவிரோதமாக ஆயுதத்தை மறைத்து வைத்திருந்ததை அறிந்த அவரது மகன், அத்துப்பாக்கியை உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியைக் கடிதம் ஊடாகத் தொடர்புகொண்டுள்ளார்.
இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரையின் பேரில் கொழும்பிலிருந்து வந்த பொலிஸ் குழுவினர், கடிதம் மூலம் தகவல் வழங்கிய நபருடன் பெரிய நீலாவணையில் உள்ள குறித்த வீட்டிற்குச் சென்று அந்த ஆயுதத்தை மீட்டுச் சென்றுள்ளனர்.
மேலும், இந்த ஆயுதத்தைச் சட்டவிரோதமாக வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர், விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா வழங்குதல் தொடர்பான முகவராகச் செயற்பட்டுள்ளதுடன், சுமார் 7 இற்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி கொண்டவராகத் தன்னை அடையாளப்படுத்திச் சமூகத்தில் நடமாடி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
--

