Dec 3, 2025 - 01:03 PM -
0
சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றிலேயே அவர் இந்த ஆலோசனையை வழங்கினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
"சமூக ஊடகங்களை எடுத்துக்கொண்டால், ஜனாதிபதிக்கும் அரசியல் அதிகாரத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கும் எதிராக மிகவும் மோசமான முறையில் அடிப்படையற்ற சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது மேலும் வளரக்கூடும். இதனை வெளிநாடுகளில் உள்ளவர்களே சமூக ஊடகங்களில் விசேடமாகச் செய்கின்றனர். இது இன்னும் ஓரிரு நாட்களில் சாதாரணமான விடயமாக மாறக்கூடும்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5வது பிரிவின் கீழ் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட கட்டளைகள் மற்றும் அவசரகால விதிமுறைகள் இந்த நிலைமையைத் தெளிவாக உள்ளடக்கியுள்ளன.
பௌதீக ரீதியாகவோ, ஒன்லைன் மூலமாகவோ அல்லது AI தொழில்நுட்பம் மூலமாகவோ, இந்த அனர்த்த நிலைமை தொடர்பில் போலியான கருத்துக்கள், திரிபுபடுத்தல்கள் அல்லது இந்த நிலைமையைத் தடுக்கும் நோக்கத்தில் எவருக்கும் அவ்வாறான பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு செய்பவர்களுக்கு 05 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை வழங்க முடியும். அத்துடன் மேலதிக குற்றங்களுக்கு 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கும் நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்."
மேலும் கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் சுனில் வட்டகல:
"இன்று சமூக ஊடகங்களைப் பார்த்தால், ஜனாதிபதி மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை உண்மையில் ஒரு மனிதனாகத் தாங்கிக்கொள்ளக் கூட முடியவில்லை. அந்தளவிற்குச் சமூகத்தைத் திரிபுபடுத்தும் நோக்கில், வக்கிர மனநிலையுடன் செயற்படும் ஒரு குழுவினர் உள்ளனர்.
நாங்கள் ஒரு அரசாங்கமாகப் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மிக உயர்ந்த, சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளோம். இவ்வாறான பின்னணியில்தான் மக்கள் கருத்தைத் திரிபுபடுத்தும் நோக்கில் இதனைச் செய்கிறார்கள். எனவே நாட்டில் சட்டம் ஒன்று உள்ளது என்று நாங்கள் கூறுகிறோம். அந்தச் சட்டத்திற்கு அமையச் செயற்பட அனைத்துப் பிரஜைகளும் கடமைப்பட்டுள்ளனர். அவ்வாறு செய்யாத பிரஜைகள் தொடர்பில் எமக்கு உச்சபட்ச சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்படும்" என்றார்.

