Dec 3, 2025 - 01:47 PM -
0
இலங்கையில் 1 வது ஸ்தானத்திலுள்ள அரச சார்பற்ற பல்கலைக்கழகமாகவும், Times உயர் கல்வி சர்வதேச பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 ல் நாடளாவில் மூன்றாவது ஸ்தானத்திலுள்ள பல்கலைக்கழகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப கற்கை நிறுவனம் (Sri Lanka Institute of Information Technology - SLIIT), 2025 செப்டெம்பர் பட்டமளிப்பு விழாவை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.
SLIIT மாலபே பல்கலைக்கழக பிரதான கேட்போர்கூடத்தில் செப்டெம்பர் 29 முதல் ஒக்டோபர் 3 வரை, ஐந்து தினங்களாக இந்த விமரிசையான விழா இடம்பெற்றுள்ளதுடன், 2,500 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும் பட்டப்பின் படிப்பு பட்டதாரிகள் தமக்கான பட்டங்களைப் பெற்றதுடன், இக்கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் சாதனையாக இது மாறியுள்ளது. இது வரை SLIIT ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப் பிரமாண்டமான பட்டமளிப்பு விழாவாக இது மாறியுள்ளதுடன், அதன் பட்டப்படிப்பின் தரத்திற்கான வெற்றியையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் தருணமாகவும் அமையப்பெற்றது.
பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு இவ்விழாவில் பட்டமளிப்பு வழங்கப்பட்டதுடன், பல வருட விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, மற்றும் கல்வி சார்ந்த சாதனைகளின் உச்சத்தை இது குறித்து நிற்கின்றது. பட்டங்களை வழங்குவதோடு மாத்திரமன்றி, தனிச்சிறப்பு மிக்க கல்வியில் இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ள வலுவான கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், உச்ச சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களுக்கு விசேட பெறுபேற்றுத்திறன் விருதுகளும் வழங்கப்பட்டு தனது மகத்துவத்தை SLIIT மேலும் கொண்டாடியுள்ளது.
இந்நிகழ்வுக்கு மேலும் பெருமை சேர்ப்பிக்கும் வகையில், MAS Holdings பிரதம டிஜிட்டல் அதிகாரி திரு. ஸ்டீவ் டொட்; OREL IT பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி உபேந்திர பீரிஸ்; இலங்கையில் ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. பிங்குமல் தேவரதந்திரி; Liverpool John Moores பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் நீதிக் கற்கைகள் கற்கைமையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் டானியல் சில்வர்ஸ்டோன்; Liverpool John Moores பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை (இணைப்பு ஆசிரியர்) விரிவுரையாளர் கலாநிதி சைமன் கூப்பர்; மற்றும் Bedfordshire பல்கலைக்கழகத்தின் உப துணைவேந்தரான (சர்வதேசம்) திரு. ஏட்ரியன் டட்ச் ஆகியோர் மதிப்பிற்குரிய பிரதம அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததுடன், பல்வேறு கௌரவ அதிதிகள் மற்றும் நன்மதிப்புடைய நிறுவனங்களிலிருந்து தொழில்துறை கூட்டாளர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
மாணவர்களைப் பொறுத்தவரையில், தமது சாதனைகளுக்கான அங்கீகாரமாக மாத்திரமன்றி, சர்வதேச பணிக்குழாத்தினுள் காலடியெடுத்து வைப்பதற்கான தமது பயணத்தின் ஆரம்பமாக அமைந்தமையால், அனேகமானவர்களுக்கு இப்பட்டமளிப்பானது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக மாறியது. உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதில் SLIIT ன் ஓயாத அர்ப்பணிப்பை இந்நிகழ்வு காண்பித்துள்ளதுடன், தொடர்ந்தும் பரிணமித்து வரும் தொழில்சார் துறையில் செழித்து வளர்வதற்குத் தேவையான திறன்கள், அறிவு, மற்றும் விழுமியங்களை பட்டதாரிகள் மத்தியில் வளர்க்கும் அதன் உறுதிப்பாட்டையும் காண்பித்துள்ளது.
மறக்கமுடியாத இத்தருணத்தைக் கொண்டாடுவதற்கு குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்கள், மதிப்பிற்குரிய விருந்தினர்கள், மற்றும் கல்விப்பீடத்தினர் என பலரும் ஒன்றுகூடியதுடன், பெருமை, மகிழ்ச்சி, மற்றும் சாதனை ஆகியவற்றைக் கொண்டாடும் சூழலை சிறப்பித்தனர். 2025 செப்டெம்பர் பட்டமளிப்பு வைபவமானது SLIIT ன் வரலாற்றில் பெருமைமிக்க அத்தியாயமாக என்றென்றும் நினைவுகூரப்படுவதுடன், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை வளர்ப்பதில் அதன் வகிபாகத்திற்கு சான்றாகவும், அடுத்த தலைமுறை தலைவர்கள் மற்றும் புத்தாக்குனர்களுக்கு வலுவூட்டும் அதன் இலக்கினை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் இந்நிகழ்வு மாறியுள்ளது.

