Dec 3, 2025 - 01:49 PM -
0
வணிக பரிமாற்ற அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான Bybit, தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, அவசரகால மனிதநேய உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதில் டிட்வா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கையில் அது முக்கிய கவனத்தை செலுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக, கடும் மழை மற்றும் புயலினால் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகள் முழுவதும் பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரழிவு, பிராந்தியம் முழுவதும் 420 இற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டுள்ளது. இதில் இலங்கையில் மாத்திரம் சுமார் 400 உயிர்கள் பலியாகியுள்ளன. அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்களும் இடம்பெயர்ந்துள்ளதோடு, முக்கியமான உட்கட்டமைப்புகளும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளன.
முன்னெப்போதும் இல்லாத இந்த நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, நிவாரண நடவடிக்கைகள், அவசரகால தங்குமிடங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்கு ஆதரவாக 100,000 டொலர் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியுடன் (CBSL) Bybit தொடர்பு கொண்டுள்ளது. இந்தக் கூட்டாண்மையானது, இந்த முக்கியமான தருணத்தில் உதவி தேவைப்படுபவர்களைச் சென்றடைவதையும், தேசிய முன்னுரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதையும் உறுதி செய்கிறது.
இது குறித்து, Bybit நிறுவனத்தின் Mini-Global பிராந்திய முகாமையாளர், நஸார் தைமோஷ்சுக் (Nazar Tymoshchuk) தெரிவிக்கையில், “இந்த பாரிய இழப்பு ஏற்பட்டுள்ள காலத்தில் இலங்கை மக்கள் மற்றும் தெற்காசிய பிராந்திய மக்கள் தொடர்பில் எமது கவனம் உள்ளது. டிட்வா புயலுக்கு பின்னரான பாதிப்புகளை மக்கள் எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலையில், நாம் அவர்களுடன் கைகோர்க்க விரும்புகிறோம். இலங்கை மத்திய வங்கி (CBSL) போன்ற நம்பகமான உள்நாட்டு பங்காளியுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு பங்களிக்க நாம் உறுதியாக இருக்கின்றோம்.” என்றார்.
இலங்கையில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன், பரவலான நிலச்சரிவுகள், போக்குவரத்து பாதைகள் சேதமடைவு, பொதுச் சேவைகள் முடங்கியுள்ளமை போன்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. ஒரு சில இடங்களில் தொடர் மழை பெய்யும் நிலைமைகளுக்கு மத்தியில், சிக்கித் தவிக்கும் மக்களை அடைவதற்கும், மின்சாரம் மற்றும் தொடர்புகளை மீள ஏற்படுத்துவதற்கும், மேலும் இழப்புகளைத் தடுப்பதற்கும் அதிகாரிகள் முன்னின்று செயற்படுவதன் மூலம், மீட்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உணவு, சுத்தமான நீர், மருத்துவ உதவி, தற்காலிக வீடுகள் மற்றும் மறுவாழ்வுத் திட்டங்கள் உள்ளிட்ட உடனடித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதை, Bybit இன் பங்களிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. நெருக்கடியான காலங்களில் அர்த்தமுள்ள செயற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலம் உலகளாவிய சமூகங்களை ஆதரிக்கும் தமது நீண்ட கால அர்ப்பணிப்பை இக்குழுமம் மீள உறுதிப்படுத்தியுள்ளது.

