Dec 3, 2025 - 01:52 PM -
0
அபிவிருத்தி வங்கிச்சேவைத் துறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைபெற்றுள்ள SDB வங்கி, தனது வலுவான அடிப்படைகள், ஒழுக்கமான ஐந்தொகை முகாமைத்துவம் மற்றும் அனைவரையும் அரவணைக்கின்ற, மற்றும் நோக்கத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்ற வங்கிச்சேவை மீதான தொடர்ச்சியான கவனம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், 2025ன் மூன்றாவது காலாண்டில் நிலைபேற்றியலுடனான நிதியியல் பெறுபேறுகளை தொடர்ந்தும் பதிவாக்கியுள்ளது. வலுவான செயல்பாட்டுச் சூழலில் நெகிழ்திறனை வெளிப்படுத்தியவாறு, ஈட்டங்கள் மற்றும் நிதி வழங்கல் செலவுகளை மூலோபாயரீதியில் உச்சப் பலனை வழங்கக்கூடியவாறு மாற்றியமைத்தமையின் துணையுடன், 2025ன் 3 வது காலாண்டின் முடிவில் ரூபா 254 மில்லியன் என்ற வரிக்குப் பின்னரான இலாபத்தை வங்கி பதிவாக்கியுள்ளது.
வங்கியின் கடன் வழங்கல் மூலோபாயத்தின் மீதான நம்பிக்கை மற்றும் அதன் வலுவான வாடிக்கையாளர் உறவுமுறைகள் ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டியவாறு, முக்கிய துறைகள் மத்தியில் கடன் வழங்கலை விரைவுபடுத்தி, புதுப்பிக்கப்பட்ட கடன் வளர்ச்சியை இக்காலாண்டு குறித்து நிற்கின்றது. கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்கான ஒப்பீட்டு அடிப்படையில் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூபா 9.7 பில்லியனால் விரிவடைந்துள்ளதுடன், செயல்படா கடன் மீதியும் குறைவடைந்துள்ளமை சொத்தின் தரம் மற்றும் வங்கியின் இடர் முகாமைத்துவக் கட்டமைப்பின் செயற்திறன் ஆகியவற்றில் மேம்பாடுகளை அடையாளப்படுத்தியுள்ளன. அதற்கேற்றவாறு, கட்டம் 3 கடன் உள்ளடக்க வீதமானது 2024ல் காணப்பட்ட 47.78% இலிருந்து 52.28% ஆக மேம்பட்டுள்ளமை, விவேகமான ஏற்பாடு மற்றும் நீடித்த கடன் வசூலிப்பு முயற்சிகளைப் பிரதிபலிக்கின்றது.
கட்டண அடிப்படையிலான சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டு முயற்சிகள் மீது வங்கி தொடர்ச்சியாக மேற்கொண்ட விரிவாக்கத்தின் உந்துசக்தியுடன், முன்னைய ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்கான ஒப்பீட்டு அடிப்படையில் தேறிய கட்டண வருமானம் 33% ஆல் அதிகரித்துள்ளது. பாரம்பரியமான கடன் வழங்கலுக்கு அப்பால், வருமான வழிமுறைகளை பன்முகப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்ற தீர்வு மதிப்புக்களை மேம்படுத்தல் ஆகியவற்றின் மீது SDB வங்கியின் அர்ப்பணிப்பை இப்பெறுபேறு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
மனித மூலதன வளங்கள் மற்றும் சேவைகளின் புத்தாக்கம் ஆகியவற்றின் மீது இலக்கு வைக்கப்பட்ட முதலீடுகளைப் பிரதிபலிக்கும் வகையில் செலவினங்கள் கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்கான ஒப்பீட்டு அடிப்படையில் 6% என்ற சிறு மட்டத்தில் அதிகரித்திருந்தாலும், மதிப்பிறக்க கட்டணங்கள் 11% ஆல் வீழ்ச்சி கண்டுள்ளமை இலாபத்திறனுக்கு மேலும் உதவியுள்ளது. 14.90% என்ற வலுவான மொத்த மூலதன போதுமை விகிதம் மற்றும் 148.65% என்ற திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் ஆகியவற்றை வங்கி பேணியுள்ளதுடன், அவை ஒழுங்குமுறை தேவைப்பாடுகளை விடவும் மிகச் சிறப்பான மட்டங்களில் காணப்படுகின்றமை, அதன் வலுவான திரவத்தன்மை ஸ்தானம் மற்றும் ஐந்தொகை உறுதிப்பாடு ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இக்காலாண்டில், அதிக செலவு கொண்ட படுகடன்களைக் குறைக்கும் அதேசமயம், செலவு குறைந்த வைப்புத் தளத்தை வலுப்படுத்தில் கவனம் செலுத்தியுள்ளதன் மூலமாக, தனது நிதி வழங்கல் கட்டமைப்பை SDB வங்கி தொடர்ந்தும் உச்சப்பயனாக்கியுள்ளது. பிரதானமாக, குறுகிய கால பொறுப்புக்களின் மீள்கொடுப்பனவுகள் மற்றும் இலங்கை ரூபாவின் மதிப்பேற்றம் ஆகியவற்றின் காரணமாக மொத்தச் சொத்துக்கள் 1% ஆல் சற்று குறைவடைந்துள்ள போதிலும், தொடர்ச்சியான கடன் வழங்கல் விஸ்தரிப்புக்கு உதவியாக, ஆரோக்கியமான திரவத்தன்மை இருப்பு மட்டத்துடன், ஸ்திரமான நிதியியல் ஸ்தானத்தை வங்கி பேணியுள்ளது.
SDB வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன அவர்கள் வங்கியின் பெறுபேறுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையில்: “விவேகம் மற்றும் நோக்கம் ஆகியவற்றுடன், பரிணமித்து வருகின்ற சந்தை நிலவரங்களைக் கடந்து செல்வதில் வங்கியின் தொடர்ச்சியான ஆற்றலை எமது 3 வது காலாண்டு பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றன. வருமான வழிமுறைகள் மற்றும் சொத்துக்களின் தரம் ஆகியவற்றின் தொடர்ச்சியான மேம்பாடானது, நிலைபேற்றியலுடன் வளர்ச்சியை சமநிலையில் பேணும் அதேசமயம், சமூகங்களுக்கு வலுவூட்டுதல், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், மற்றும் கூட்டுறவுத் துறையைப் பலப்படுத்தல் ஆகிய எமது பிரதான நோக்கத்தின் மீது தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எமது நீண்ட கால மூலோபாயத்தை உறுதிப்படுத்துகின்றது. எமது மனித வள மூலதனம், எமது டிஜிட்டல் மற்றும் சுற்றுச்சூழல், நிலைபேற்றியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய பரிணாம மாற்றம் ஆகியவற்றின் மீது நாம் தொடர்ந்தும் முதலீடு செய்து வருகின்றோம்.” நிதி ஒருங்கிணைப்பு, கட்டமைப்பு சீர்திருத்தங்கள், மற்றும் அதிகரித்துச் செல்லும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவற்றின் துணையுடன், இக்காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் அதன் மீட்சி உத்வேகத்தை தொடர்ந்தும் பேணியுள்ளது. இத்தகைய சாதகமான சூழலில், அனைவரையும் அரவணைக்கும் வளர்ச்சி, நிலைபேற்றியல் கொண்ட கடன்களை மேம்படுத்தல், டிஜிட்டல் வழியில் அணுகல் வசதிகளை விரிவுபடுத்தல், நாடெங்கிலும் சமூகங்கள் மத்தியில் நெகிழ்திறனை வளர்த்தல் ஆகியவற்றில் வழிகாட்டி என்ற தனது வகிபாகத்தை SDB வங்கி தொடர்ந்தும் உறுதிப்படுத்தியுள்ளது.
SDB வங்கி குறித்த விபரங்கள்:
ஒவ்வொருவரினதும் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட, வாடிக்கையாளரை மையப்படுத்திய மற்றும் விரிவான ஆதரவை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ள, எதிர்காலத்திற்கு முகங்கொடுக்கத் தயாராகவுள்ள வங்கியான SDB வங்கி, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தலுடன், இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகத் திகழ்வதுடன், BB +(lka) என்ற Fitch Rating கடன் தர மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. நாடளாவியரீதியிலுள்ள 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, நாடெங்கிலுமுள்ள தனது தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வர்த்தக வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை இவ்வங்கி வழங்கி வருகின்றது. சூழல், சமூகம், மற்றும் நிர்வாக ஆட்சி (Environmental, Social, and Governance - ESG) கோட்பாடுகள் SDB வங்கியின் பண்பாடுகளில் ஆழமாக உட்பொதிந்துள்ளதுடன், நிலைபேற்றியல் கொண்ட நடைமுறைகள் மூலமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வர்த்தகங்களை மேம்படுத்துவதில் மிகவுறுதியான கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையை புதிய உச்சங்களுக்கு இட்டுச்செல்லும் நோக்குடன், குறிப்பாக பெண்களுக்கு வலுவூட்டல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் நிலைபேணத்தக்க அபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல் ரீதியாக அனைவரையும் அரவணைத்து வாய்ப்பளித்தல் ஆகியவற்றில் இவ்வங்கி அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்றது.

